இலங்கை

சிறீதரனின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவி பறிப்பு : கொண்டாடியவர்களை சாடும் சிறிநேசன்

ஒரு கட்சிக்குள் இருந்து பதவி பரிமாறப்படுகின்ற போது அல்லது ஒருவரிடம் இருந்த பொறுப்பு அவரது விருப்பத்துக்கு மாறாக பெற்றுக்கொண்டு இன்னுமொருவருக்கு கொடுக்கப்படுகின்ற போது இதனைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் பார்க்கின்ற போது சிறீதரனிடம் இருந்து நாடாளுமன்ற குழு தலைவர் என்ற பொறுப்பை எமது கட்சியின் அரசியல் குழுவை தற்காலிகமாக இடைநிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தற்காலிகமாக கொடுத்திருக்கின்றது.இதுதான் உண்மையாக நடந்த சம்பவம்.

இந்த சம்பவத்தின் பின்னர் பல இடங்களில் பதாகைகள் கட்டி தொங்க விடப்பட்டதையும், பட்டாசுகள் வெடித்ததையும், இனிப்புகள் கொடுத்ததைப் பற்றியும் ஊடகவியலாளர்கள் எம்மிடம் கேட்கின்றார்கள்.

அதாவது உங்கள் கட்சிக்குள் இருந்துதான் இந்த பதவிகள் பரிமாறப்பட்டிருக்கின்றபோது ஏன் பட்டாசு வெடிக்கச் செய்தார்கள், ஏன் இனிப்பு கொடுக்கிறார்கள், ஏன் பதாகைகள் தொங்க விட்டார்கள், என்ற கேள்விகளை ஊடகவியலாளர்கள் எங்கள் மீது தொடுக்கின்றீர்கள்.

உண்மையில் நானும் கேட்கின்றேன் ஒரு கட்சிக்குள் இருந்து பதவி பரிமாறப்படுகின்ற போது அல்லது ஒருவரிடம் இருந்த பொறுப்பு அவரது விருப்பத்துக்கு மாறாக பெற்றுக்கொண்டு இன்னுமொருவருக்கு கொடுக்கப்படுகின்ற போது இதனைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இது கொண்டாட வேண்டிய ஒரு விடயமும் இல்லை.

ஏனெனில் கடந்த காலத்தில் சம்பந்தன் ஐயாவும் இந்த பதவியை வகித்திருந்தார். அவருக்கும் ஆதரவாக பட்டாசுகளும் வெடிக்கவில்லை, பதாகைகளும் தொங்கவிடப்படவில்லை, இனிப்புகளும் பரிமாறப்படவில்லை.

அதேபோன்றுதான் சிறீதரனும் அந்த பொறுப்பை கையாண்டிருந்தார். அதற்கும் கொண்டாட்டம் எதுவுமே நடைபெறவில்லை. அவ்வாறு இருக்கின்றபோது இந்த சிறிய விடயத்தை மிகவும் ஒரு கொண்டாட்ட நிகழ்வாக ஏன் மாற்றினார்கள்? யார் மாற்றினார்கள், யாரால் மாற்றப்பட்டது. என்ற கேள்வி இருக்கின்றது.

அதாவது இது ஒரு எமது இனப்பிரச்சனைக்கான தீர்வை கண்டது போன்று, வடக்கு கிழக்கு இணைந்தது போன்று, ஒரு தேர்தல் மூலமாக வடக்கு கிழக்குக்கு ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டது போன்றும், இது பெரிபித்துக் காட்டப்பட்டது.

எங்களுடைய கட்சி தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூட ஒரு பதிவை விட்டிருந்தார். மிகவும் பொறுப்புடன் அந்த பதிவை அவர் சொல்லியிருந்தார். இப்படி செய்திருக்கின்றீர்கள் இது தவிர்க்கப்பட வேண்டிய விடயம் என தெரிவித்திருந்தார்.

அதேபோன்றுதான் சுமந்திரனும் ஒரு பதிவை இட்டிருந்தார். கட்சியினர் இவ்வாறான விடயங்களை தவிர்த்து இருக்க வேண்டும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஆகவே ஊடகவியலாளர்களுடைய பார்வையிலும், என்னுடைய பார்வையிலும், கட்சியின் தலைவரின் பார்வையிலும், கட்சியின் செயலாளரின் பார்வையிலும், இப்படியான ஒரு கொண்டாட்டம் செய்வது ஒரு பக்கத்தில் பதவி இழந்து இருக்கின்றபோது அவரை நோகடிப்பது போன்று ஏதோ நாம் பெரிய பதவியை பெற்று விட்டோம் என அதனை நாம் கொண்டாடுவது போன்று அமைந்திருந்தது.

இந்த விடயம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தெரியாமல் இருந்ததா? அல்லது எவ்வாறு நடந்தது? என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே எங்களுடைய எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.

அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்ற போது இந்த சிறிய சிறிய விடயங்களுக்கு எல்லாம் நாங்கள் அதனை பெரிதாக காட்டி பூதகாரப்படுத்தி பெரிதாக நாங்கள் விடயத்தை பெருப்பித்துக் காட்டுவது என்பது ஒரு பொறுப்புள்ள ஒரு விடயமாக இருக்க முடியாது.

இந்த விடயத்தை நான் வேறு இடங்களுக்கு செல்கின்ற போதெல்லாம் மக்கள் கேட்டார்கள். ஆகவே ஒரு உட்கட்சிக்குள் இருக்கின்ற பதவிகள் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டு இன்னொருவரிம் கொடுக்கப்பட்டிருக்கிறது இதனை கொண்டாடுகின்ற போது ஓரளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றவர்களை நாங்கள் கேலி செய்கின்ற விடயமாகத்தான் நான் இதனை பார்க்கின்றேன்.

சிறுபிள்ளைத்தனமான இந்த செயல்களை யாராவது தூண்டியிருந்தால் இனிமேல் இவ்வாறான விடயங்களைச் செய்யக்கூடாது. மற்றவர்களை தூண்டி விட்டதன் காரணமாகதான் இது செய்யப்பட்டதாக சொல்லுகின்றார்கள்.

ஆகவே இவ்வாறான செயல்களை தவிர்த்துக் கொள்வதுதான் இந்த கட்சியின் ஒற்றுமைக்கும் ஒருமித்த பயணத்திற்கும் வழியாக இருக்கும். அதனைப் பிடித்து இவற்றையெல்லாம் நாங்கள் பெரிதுபடுத்துகின்ற போது எல்லோரும் நினைத்திருப்பார்கள் ஏதோ இனப்பிரச்சனை தீர்ந்து விட்டது போல் இருக்கிறது. அதுதான் பட்டாசுகள் கடுமையாக வெடிக்கின்றது என சிந்தித்து இருப்பார்கள்.

சின்னச் சின்ன விடயங்களில் பதவி விடயங்களுக்கு நாங்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை கேவலப்படுத்துகின்ற மன துயரங்களுக்கு உட்படுத்துகின்ற மனவேதனைகளுக்கு உட்படுத்துகின்ற செயல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்கின்றேன்.

சிலரிடம் நான் இது பற்றி விசாரித்த போது அவர்கள் இயல்பாக இதனை செய்யவில்லை. அவர்களுக்கு ஆணைகள் கிடைத்து இருக்கின்றன அல்லது இவ்வாறு செய்ய வேண்டும் என பணிக்கப்பட்டிருக்கின்றார்கள் அதன் காரணமாகத்தான் இது நடந்திருக்கின்றது. அதனை செய்திருக்கக் கூடாதுதான் என இதனைச் நடத்தியவர்களும் கருதுகின்றார்கள்.

ஏனெனில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த விடயத்தில் மனவேதனைப்படுகின்றார். தன்னிடமிருந்து பறித்ததனால்தான் இவ்வளவு கொண்டாட்டம் நடத்துகின்றார்களோ என்று அவர் கேட்கக்கூடிய நிலையில் இருக்கிறார்.

ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் கடந்த காலத்தில் நடைபெறவில்லை. பல முதிர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவியை வகித்தவர்கள் இப்படியான ஒரு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

எங்களுக்கு பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன பொழுது இந்த சிறிய விடயத்துக்காக ஆர்ப்பரித்து இதனை பெரிதாக காட்டுவது என்பது எங்களிடம் இருக்கின்ற ஏதோ குறைபாடு என்றுதான் நான் சொல்ல வேண்டும்.

அரசியல் குழு மூலமாக சிறீதரன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக சொல்லுகின்றார்கள். அதிலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆனால் நாங்கள் எங்களுக்கென மக்களால் தெரிவு செய்யப்பட்ட எட்டு பேரைக் கொண்ட குழு ஒன்று இருக்கின்றது. இந்த எட்டு பேரைக் கொண்ட குழுவிடம் ஏன் இந்த ஒரு விடயமும் கேட்கப்படவில்லை என்ற கேள்வியைக்கூட கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே கடந்த காலத்தில் இந்த நாடாளுமன்ற குழு மூலமாகத்தான் நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவு செய்யப்படுகின்ற தன்மை, பேச்சாளர் தெரிவு செய்யப்படுகின்ற தன்மை, தேசியப் பட்டியல் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்படுகின்ற தன்மை, அதேபோல் பிரதம கொறடா போன்ற பதவிகள், அந்த குழு மூலமாக தெரிவு செய்யப்படுகின்ற நிலைமை காணப்பட்டிருந்தது.

இம்முறை அரசியல் குழுவே சகல பொறுப்புகளையும் எடுத்து செய்திருக்கின்றது. ஆகவே அரசியல் குழுவில் இந்த செயற்பாடு காரணமாக இப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கின்றது.

சிறீதரனின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவி பறிப்பு : கொண்டாடியவர்களை சாடும் சிறிநேசன் | Sridharan Removed Parliamentary Committee Chairman

அடுத்த தீர்மானத்தையும் நாங்கள் ஒரு சாதாரண ஒரு தீர்மானமாக ஊடகவியலாளர்கள் சொல்வது போன்று கட்சிக்குள் நடக்கின்ற விடயத்தை கட்சிக்குள்ளேயே விடாமல் இதனை பெரியதொரு விகாரப்படுத்தி செய்தது என்பது சிறீதரனை அவர்களை மனதளவில் பாதிக்கின்ற ஒரு விடயமாக இருக்கும்.

இந்த விடயத்தை இன்னும் ஒருவர் எடுத்து கையாளுகின்றபோது சாதாரணமாக கையாண்டிருக்கலாம். நாம் ஏதோ அவரிடம் இருந்து பறித்து விட்டோம் என்றதொரு கொண்டாட்டம் நடத்தியது போன்றுதான் இருப்பது என்பது இந்த தமிழரசு கட்சிக்கு இவ்வாறானதொரு செயற்பாடு என்பது சில முரண்பாடுகளை அல்லது பிளவுகளை புரிந்துணர்வில்லாத தன்மையை ஏற்படுத்தும்.“ என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *