உலகம்

ட்ரம்ப் பெயர் வந்தவுடன் மௌனம்; உண்மையை மறைக்கும் மெக்ஸ்வெல்

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இணைந்து பாலியல் கடத்தல் குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கிஸ்லைன் மெக்ஸ்வெல், அமெரிக்க ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

டெக்சாஸ் சிறையிலிருந்து மெய்நிகர் (Virtual) முறையில் சாட்சியமளிக்க முன்னிலையான மெக்ஸ்வெல், அமைதியாக இருப்பதற்கான தனது அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்திப் பதிலளிக்கத் தவறியுள்ளார்.

மெக்ஸ்வெல்லிடம் இருந்தும் எப்ஸ்டீனிடம் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் குறித்த பல கேள்விகள் இருந்த போதிலும், எந்தப் பதிலையும் பெற முடியாமல் போனது பெரும் ஏமாற்றமளிப்பதாகக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் கோமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே மெக்ஸ்வெல் உண்மைகளைப் பேசத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி டேவிட் ஆஸ்கார் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, “முழு உண்மையையும் கூறக்கூடிய ஒரே நபர் அவர்தான்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எப்ஸ்டீனிடம் இருந்து உயிர் தப்பியவர்கள் குழு, மெக்ஸ்வெல்லின் தகவல்களை எச்சரிக்கையுடன் அணுகுமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதிகாரமுள்ள பல ஆண்களைக் காப்பதற்காக அவர் உண்மைகளை மறைப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

பாலியல் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டிருந்த முக்கிய நபர்கள் குறித்த விவரங்களை வெளியிட மெக்ஸ்வெல் தொடர்ச்சியாக மறுத்து வருவது, இவ்வழக்கில் உள்ள மர்மங்களை இன்னும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *