வட, கிழக்கிலிருந்து சிறுவர்கள் பாலியல் தேவைகளுக்காகவும் கடத்தப்பட்டார்களா?; எப்ஸ்டீன் ஆவணங்களால் புதுக் கேள்வி எழுகிறது

கொடூரமான யுத்தம் நடந்த இந்த நாட்டில் அதிகார வர்க்கத்தால் சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்களா இல்லையா என்பதை சொல்லவேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது என தெரிவித்த தமிழ் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சட்டத்தரணி உமாகரன் இராசையா, கடந்த காலத்தில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு யுத்தத்தை மட்டும் காரணமாக பார்க்க முடியாது என்றார்.
சர்வதேச ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே உமாகரன் இராசையா இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவில் கரீபியன் தீவுகளில் 13 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கடத்தப்பட்டு உலகத் தலைவர்கள் பலராலும் கற்பழிக்கப்பட்டு அல்லது பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இயற்கைக்கு முரணான விதத்தில் பாலியல் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.நரபலி சம்பந்தமாகவும் பேசப்படுகிறது.
இந்த ஆவணங்களைப் பொறுத்த வரைக்கும் இலங்கை என்ற சொற்பதம் 188 இடங்களில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் எல்லாமே குற்ற செயல்களுடன் தொடர்புடையது என்று எப்படி சொல்ல முடியாதோ அதே நேரம் தொடர்பில்லை என்றும் சொல்ல முடியாது. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
இலங்கையைப் பொறுத்த வரைக்கும் 1958 ம் ஆண்டு முதல் தடவையாக அரசியல் குற்றமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்படுகிறார்கள். இது முதல் தடவையாக அரசியல் குற்றமாகவும் காணாமல் ஆக்கப்படுதலாகவும் பார்க்கப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பிறகு இலங்கை அரசியலில் 1958 தொடக்கம் 2026 ஆம் ஆண்டு வரைக்கும் அதிகமாக காணாமல் ஆக்கப்படுதல் நடந்து வருகிறது. இந்தக் காலப்பகுதியில் கடத்தப்பட்ட சிறுவர்கள் அரசியல் சார்ந்த குற்றத்திற்கு மாத்திரம் காணாமல் போனதாக கருதப்பட முடியாது.
எப்ஸ்டீன் ஆவணங்கள் உலக அரங்கில் ஒரு விடயத்தை சொல்லி இருக்கிறது. மிகக் கொடூரமான பாலியல் செயலுக்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்ற சிறுவர்கள் சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசியல் சார்ந்த குற்றமாக மட்டும் வைத்து விசாரணை செய்ய முடியாது.
2009ல் இருந்து 2026 ஆண்டு வரையான காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர் சிறுமிகயருக்கு என்ன நடந்தது என்று விசாரணையில், பாலியல் சுரண்டல் ரீதியாகவும் மனித ஆட் கடத்தல் ரீதியாகவும் இந்த அரசு விசாரணை செய்ததா என்ற கேள்வியை எழுப்புகிறேன்.
அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பே தற்போது ஆட்சியில் இருக்கின்ற ஜே.வி.பி.யாகும். ஆகவே மிகப்பெரிய பொறுப்பும் கடப்பாடும் இந்த விசாரணையை செய்யும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.
23 ஆயிரம் பேரை காணவில்லை என்று காணாமல் போனோருக்கான அலுவலகம் கூறியுள்ளது. இங்கு சில தரவுகளின் படி இதில் 10 சதவீதமானோரை சிறுவர்களாகக் கருத முடியும்.
ஆனால் சிறுவர்கள் எத்தனை பேர் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கான முழுமையான தரவுகள் இல்லை. இது தொடர்பில் ஆதாரபூர்வமான விசாரணைகள் செய்யப்பட வேண்டும்.
இவ்வளவு காலமும் நாங்கள், யுத்தத்தின் காரணமாக இந்தக் காணாமல் ஆக்கப்படுதல்கள் இடம்பெற்றது என்று நம்பினோம்.
ஆனால் எப்ஸ்டீன் ஆவணங்களின் வெளியீட்டின் பின்னர் இந்த உலகத்தில் அது போன்ற எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
சிறுவர்களை வைத்து இந்த நாட்டில் வணிகம் நடந்து இருக்கின்றதா? என்று கேள்வி எழும்புகின்றது.
சிறுவர்கள் வியாபாரத்துக்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். இது தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரம் நடக்கவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் பெரும்பாலானவை நடந்திருந்தாலும் இது சிங்களவர்களுக்கும் நடந்திருக்கிறது.
இதற்கான பதிலை அரசு தர வேண்டும். இதற்காக ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஜே.வி.பி.யின் செயலாளருக்கும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
அதிகார சக்தியினால் இந்தக் குற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடக்கம் பிரித்தானிய முன்னாள் இளவரசர் வரைக்கும் இந்த சர்ச்சை தொடர்கிறது.
கொடூரமான யுத்தம் நடந்த இந்த நாட்டில் அதிகார வர்க்கத்தால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்களா இல்லையா என்பதை சொல்லவேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் கொண்ட
எப்ஸ்டீன் ஆவணங்களின் தாக்கங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு எவ்வளவு தூரம் பொறுப்புகள் உண்டு என்பதனைக் கூற ஈழத் தமிழனாக எனக்கு முழுமை உரிமையும் உண்டு.
சிறுவர்கள் இலட்சக்கணக்கான டொலருக்கு வியாபாரப் பொருளாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. 2009 இல் இருந்து 2026 என விசேடமாக நான் குறிப்பிடப்படுவதற்கு காரணம் உண்டு. அண்மைக்காலமாக இடம்பெற்ற விடயங்களை இலகுவாக விசாரணை செய்ய முடியும். இதனை செய்தால் அடுத்தடுத்த கட்டங்களை செய்ய முடியும்.
யுத்தத்துடன் தொடர்புடையதாகவும் யுத்தத்திற்குள் மூடி மறைக்கப்பட்டதாகவும் காணாமல் ஆக்கப்படுதல் இருக்கிறது. இதில் வியாபாரம் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதற்கான ஆதாரம் வெளிப்பட்டிருப்பதால் அந்தக் கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை அந்தக் கோணத்தில் நடத்தப்படாவிட்டால் இந்த நாடு குற்றம் செய்வதாகவே கருத முடியும் – என்றார்.
![]()