இலங்கை

மாகாண சபை தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறாது; விளக்கத்துடன் ஜெனீவா செல்ல தயாராகும் அரசாங்கம்

மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதனை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாகாண சபை தேர்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட தேசிய நல்லிணக்க பொறிமுறையின் பூர்ண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு செல்ல உள்ளது.

இதன் போது இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. அத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஜெனீவா செல்வதற்கு முன்னர் நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மறுபுறம் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்படும் மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் உற்சாகமாக இல்லை. பெரும்பாலும் இந்த தேர்தலை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கவே அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது.

தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாகாணசபை தேர்தலை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன் நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக வழிகாட்டுதல் கோரி தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகத்திற்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் , ஆனால் இதுவரை ஜனாதிபதி செயலகத்திலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு சுமார் நான்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவால் எதுவும் செய்ய முடியாது என்பதுடன், தேர்தல் குறித்து முடிவு தற்போது சட்டத் திருத்தங்களை சார்ந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதற்கு அரசாங்கப் பிரதிநிதிகளை நியமிக்க இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எதிர்க்கட்சி தனது நான்கு பிரதிநிதிகளாக ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், நிசாம் காரியப்பர் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரை நியமித்துள்ளது. இருப்பினும் அரசாங்கம் இதுவரை தனது 12 பிரதிநிதிகளை பரிந்துரைக்கத் தவறியதால் தெரிவுக் குழு கூட முடியவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே மாகாண சபை தேர்தல் குறித்து ஜெனிவாவில் அரசாங்கம் தெளிவுப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *