இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தாது வழக்கை முடிவுக்கு கொண்டுவர முயற்சி

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் வழக்கை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடர் நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காக அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறு குறிப்பிட்டோம். அதனைத் தவிர்த்து இந்த சட்டத்தை மாதக்கணக்கில் அமுல்படுத்துமாறு நாங்கள் குறிப்பிடவில்லை.

அவசரகால சட்டத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்புப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக 23269 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2190 சாட்சியாளர்கள் இருப்பதுடன், 24 பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள்.

வழக்கு விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கு தினசரி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலை 09.30 முதல் மாலை 04 மணிவரை வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் பிரதான சூத்திரதாரியின் பெயர் குறிப்பிடாமல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரதான சூத்திரதாரியின் பெயரை எழுதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஒப்படைத்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன குறிப்பிட்டார். ஆனால் இன்றளவில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.

பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் 2026.04.21 ஆம் திகதிக்கு முன்னர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

நாளாந்தம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது முன்னிலையாக முடியாது என்று குறிப்பிட்டு பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் வழக்கில் இருந்து விலகியுள்ளார்கள். நீதியான வழக்கு விசாரணைக்கான சூழல் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

காட்டு நீதிமன்றத்திலா குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. விரைவாக வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்து பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கினை புதுக்கடை நீதிமன்றத்தில் தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் கொழும்பு 07 அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் கடும் பாதுகாப்புடன் எவருக்கும் அனுமதியளிக்காமல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அமைச்சரில் வீட்டில் வழக்கினை எவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும். பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தி நீதியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *