நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்தாரிக்கு மீண்டும் விசாரணை

நியூசிலாந்து, கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி மேன்முறையீடு செய்துள்ள மனு மீதான ஒரு வார கால விசாரணை, நாளை ஆரம்பமாகிறது.
இந்த விசாரணை வெல்லிங்டன் நீதிமன்றத்தில் (09) ஆரம்பமாகிறது. முன்னதாக, 2019 மார்ச் 15 அன்று பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இவர் நடத்திய தாக்குதல் உலகையே உலுக்கியது.
இந்த வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் குற்றவாளி என்ற தீர்ப்பை எதிர்த்து அவர் தற்போது மேன்முறையீடு செய்துள்ளார்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தான் முன்னதாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை திரும்பப் பெறவும் அவர் அனுமதி கோரியுள்ளார்.
இந்த விசாரணையில் நீதிமன்றம் முக்கியமாக இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவுள்ளது
2020 ஆம் ஆண்டின் இறுதியில், நியூசிலாந்து வரலாற்றிலேயே முதல்முறையாக இவருக்குப் பிணையில் வரமுடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டு 20 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்திருக்க வேண்டிய நிலையில், 5 ஆண்டுகள் தாமதமாக அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பது சட்டரீதியாகப் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மேன்முறையீடு தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், நீதிமன்றம் இதனை வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்த அனுமதிக்காது என சட்ட வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கிறைஸ்ட்சர்ச் தாக்குதலின் ஒரு மாத இடைவெளியில், 2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது.
கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இலங்கையில் இந்தத் தற்கொலைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததாக அப்போதைய இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பிட்டிருந்தனர்.
![]()