யாழ்.வர அச்சுறுத்தல்! யாழ். நீதிமன்றில் கோட்டபாய சத்திய கடதாசி

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பிலும் சாட்சியம் அளிப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதர தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இணையவழியில் சாட்சியம் வழங்க அனுமதிக்க கோரியும் அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்ஷ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் சத்திய கடதாசியை சமர்ப்பித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வருவதற்கு என்ன அச்சுறுத்தல் இருக்கிறது என்பதனை நியாமான காரணங்களுடன் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் கடந்த வழக்கு தவணையின் போது உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ தரப்பு அச்சுறுத்தல் என சத்திய கடதாசியை சமர்ப்பித்தபோதும் என்ன காரணத்திற்காக அச்சுறுத்தல் என்பதை தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்பதை மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இது தொடர்பிலான விடயங்களின் எழுத்து மூலமான சமர்ப்பணங்களை இரு தரப்பினரும் எதிர்வரும் மார்ச் 6ம் திகதி அழைக்கப்படும் அடுத்த வழக்கு தவணையின்போது சமர்பிக்கப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி றிவிகார பின்னதுவவுடன் சட்டத்தரணி புரந்தனும் கோட்டபாய ராஜபக்ஷ சார்பில் சட்டத்தரணி சுரங்க பெரேராவும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து முதல் நாள் கடத்தப்பட்டனர்.
அதனை அடுத்து லலித் மற்றும் குகன் ஆகியயோரின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைகளின் போது , 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோட்டபாய ராஜபக்ஷவின் பெயர் இணைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , கோட்டபாய ராஜபக்ச மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு மன்று உத்தரவிட்டது.
பாதுகாப்பு காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என தொடர்ச்சியாக கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()