இலங்கை

காணாமல் ஆக்கப்படல்கள்; யாழ் நகரில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

அனைத்துக் காணாமல் ஆக்கப்படல்களுக்கு நீதி கோரியும், லலித்குமார், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச முன்னிலையாகாமைக்கு எதிராகவும் சம உரிமை இயக்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் லலித்குமாரின் தந்தை வீரராஜ், மூத்த பொதுவுடைமைவாதி சி.கா.செந்திவேல், மூத்த எழுத்தாளர் க.தணிகாசலம், தந்தை செல்வாவின் பேரன் ச.இளங்கோவன், சம உரிமை இயக்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள், அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகப் போராடிய லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த வழக்கின் சாட்சியாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சாட்சியமளிக்க நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் இவர் இந்த வழக்கில் சாட்சியமளிப்பதைத் தொடர்ச்சியாகத் தவிர்த்து வந்ததுடன் இணையவழியாகச் சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார். இதுதொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் கோட்டபாய ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இவ்வாறு நீதிமன்றத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பதற்கு எதிராகவும், அனைத்துக் காணாமல் ஆக்கப்படல்களுக்கும் நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியோம்!, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!, மேலதிக அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்!, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு! , அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்பை வென்றெடுப்போம்! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பியதுடன் தமிழ், சிங்கள மொழிகளிலான பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *