கவிதைகள்

குளிர்ந்திடும் மனத்துடன் வாழ்ந்திட வேண்டும்!…. கவிதை… ஜெயராமசர்மா

பெற்றார் உற்றார் பேணிடு மனைவரும்
எப்பவும் துணையா யிருந்திட வேண்டும்
தம்பிதங் கூறா வகையிலே நாங்களும்
எப்பவும் வாழ்வில் இருந்திட வேணும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறா
தெள்ளிய மனத்துடன் திகழ்ந்திட வேண்டும்
கள்ளமே இல்லா கசடடுகள் இல்லா
நல்லதை எண்ணியே நடந்திட வேணும்

பாசத்தை வேஷமாய் ஆக்கிட வேண்டாம்
பக்குவம் என்பதைக் குலைத்திட வேண்டாம்
கோபத்தைக் குணமாய்க் கொண்டிட வேண்டாம்
குளிர்ந்திடும் மனத்துடன் வாழ்ந்திட வேண்டும்

எல்லாந் தெரியு மென்னுங் குணத்தை
இல்லா தொழித்தால் எல்லாம் இன்பமே
தெரியுந் தெரியும் என்றே திரிந்தால்
சிறந்த உறவுகள் சிதைந்தே போகும்

தர்க்கஞ் செய்தால் சஞ்சலம் பெருகும்
சந்தோஷ மனைத்து மோடியே மறையும்
சொந்தம் தொலையும் சுகமும் குலையும்
மந்த மாருதம் வரண்டே போகும்

விட்டுக் கொடுத்தால் விரியும் உறவுகள்
தட்டிப் பறித்தால் தானா யகன்றிடும்
கட்டி அணைத்து கருணையைக் காட்டினால்
கெட்டியாய் பிடித்து மட்டிலா மகிழும் !

Screenshot

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

One Comment

  1. வாழும் வழியை அழகாய் சொன்னீர். விட்டுக் கொடுக்கும் பண்பும், தெள்ளிய மனமும், கள்ளம் கசடு இல்லா மனமும் இருந்தால் குளிர்ந்த மனம் இயல்பாய் வரும். வழியுரைத்த ஐயனுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *