கவிதைகள்

இல்லாதவர்களுக்கு உதவிட வேண்டும்… கவிதை… அன்பு ஜெயா, சிட்னி

(எழு சீர் குறள்வெண் செந்துறை)

உண்டிட உணவும் இன்றியே வாழ்வில்
உழன்றுமே வாடுவோர்க் கிங்கே
உண்மையாய் உதவி செய்திடில் நாட்டில்
ஒழியுமே வறுமைதான் விரைவில்! (1)

இயன்றதோர் அளவில் ஏழ்மையை ஒழிக்க
ஏற்றமாய் நாம்செயல் புரிவோம்!
பயனுமே விளையும் விரைவினில் காண்போம்
பாரினில் நலமினிப் பெருகும்! (2)

செய்திடும் உதவி சிறியதாய் இருந்தும்
சிறிதுமே தன்பயன் நோக்கிச்
செய்திடா உதவி சிறப்பினைப் பெறுமே
செய்வதும் உடனடி செய்வோம்! (3)

கல்வியும் கற்க வழியுமே இன்றிக்
கலங்கிடும் சிறாருமே கற்க
நல்லதோர் வழியும் காட்டியே வாழ்ந்தால்
நாடுமே நலமதைப் பெறுமே! (4)

உடுத்திட ஆடை இன்றியே உலகில்
ஒடுங்கியே வாழ்ந்திடும் எளியோர்,
படுத்திட இடமும் இன்றியே வாழ்வோர்
பயன்பெறத் திட்டமும் வேண்டும்! (5)

அளவினில் பெரிய உதவியும் புரிய
ஆள்பவர் முன்வர வேண்டும்
வளமுடன் திட்டம் வகுத்துமே மக்கள்
வாழ்வினை உயர்த்திட வேண்டும்! (6)

அன்பு ஜெயா, சிட்னி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *