அரசின் ஊழல்களை மறைக்க எம்மை நீதிமன்றத்திற்கு அழைப்பதில் பயனில்லை – நாமல் காட்டம்

அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் மற்றும் கொள்கலன் முறைகேடுகளை மறைப்பதற்காகவே தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை நீதிமன்றத்திற்கு அழைத்து வேட்டையாடும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கலிங்கா பல்கலைக்கழகம் தனக்கு விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்று உரையாற்றியமைக்காக அரசாங்கம் தேவையற்ற விதத்தில் பதற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவ்வாறான சர்வதேச அங்கீகாரங்களைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை எனவும், சிஸ்டத்தை மாற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது இருக்கும் சிஸ்டத்தையும் அழித்து வருவதாகவும் அவர் சாடினார்.
நிர்வாகக் குளறுபடிகள் குறித்து மேலதிகமாக கருத்துத் தெரிவித்த அவர், பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் திணைக்களம் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.
தான் ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய ஒரு தினத்தில், அதற்கு முன்னதாகவே அறிவித்தல் கொடுத்திருந்தும், சரியாக அதே நேரத்தில் கொழும்பில் ஆஜராகுமாறு தங்காலைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
காலை 9:30 மணிக்கு ஆஜராகச் சொல்லி, 9:50 மணிக்கு தங்காலைக்கு கடிதத்தை ஒப்படைப்பதன் மூலம், தூரம் மற்றும் நடைமுறை குறித்து பொலிஸ்மா அதிபருக்கு இருக்கும் அறிவீனம் வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜனாதிபதி வழங்கிய காசோலைகள் வங்கியில் பணமில்லாமல் திரும்பி வருவதாகவும், சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்க முடியாது தவிக்கும் அரசாங்கம் வெறும் காட்சிக்காக மாத்திரம் விழாக்களை நடத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
நாடு இப்போதுதான் உண்மையான வைய்யப்ப்பட்ட நிலையை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமக்கு சாதகமாகச் செயற்படாத நீதிபதிகளை இடமாற்றம் செய்வது மற்றும் பொலிஸாரை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துவது போன்ற செயல்களின் மூலம் அரசாங்கம் நீதித்துறையில் தலையிடுவதாகவும் தெரிவித்தார்.
நிலக்கரி இறக்குமதி ஊழல் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட சம்பவங்களை மறைக்கவே இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இவற்றுக்கு அஞ்சப்போவதில்லை எனவும் நாமல் ராஜபக்ச இதன்போது வலியுறுத்தினார்.
![]()