சேர்ந்திணைந்து வாழ்ந்தாலே சிறப்பு… கவிதை… அன்பு ஜெயா, சிட்னி

(தரவு கொச்சகக் கலிப்பா)
கார்காலம் வரும்பொழுதுக் கருமுகிலும் பரவிடுமே
தேர்மீதில் வருவானே தேடியென்றன் தலைவனெனப்
பார்த்திருந்தத் தலைவிக்குப் பசலையதும் விரவிடுமே
சேர்ந்திணைந்து வாழ்வதிலே செம்மையதும் துலங்கிடுமே! (1)
ஊர்கூடி இழுத்தாலே உருண்டோடும் பெருந்தேரும்
பார்போற்ற இணைந்திருந்தால் பகைதன்னை அடக்கிடலாம்
வேர்விட்டே உறவிணைந்தால் விளைந்திடுமே பெருவெற்றி
சேர்ந்திணைந்தே செலுத்தவாழ்வில் சிறப்பினையும் பெறலாமே! (2)
தேரோட அனைவருமே திரண்டிங்கே இழுக்கவேண்டும்
ஊரோடே ஒருமித்தே உணர்ந்துழைத்தல் சிறப்புறுமே
வேரோடிப் பயிர்வளர்ந்தால் விளைச்சலுமே பெருகிடுமே
ஊரோடு நலம்பெறவே ஒருமித்தே உழைத்திடுவோம்! (3)
உரிமையினைப் அடைந்திட்டோம் ஒருங்கிணைந்துப் பொருதுமிங்கே
உரிமையினைப் பறித்திடவே ஒருக்காலும் இடமளியோம்
எரிமலையாய் வெடித்திடுவோம் எதிர்வந்தோர் நடுங்கிடவே
உரிமையுடன் இணைந்திங்கே உயர்ந்திடுவோம் அனைவருமே! (4)

![]()
அருமை அருமை. கவிதை நயமும் கருத்துச் செறிவும் நெஞ்சை அள்ளுது