இலங்கை

பொலிஸ் தாக்குதலுக்கு எதிராக ஒன்று கூடிய கிறிஸ்தவ மதகுருக்கள், கன்னியாஸ்திரிகள்;  நீர்கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம் 

கொழும்பு கத்தோலிக்க மறை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு மிலன் பிரியதர்ஷனவை பொலிஸார் கடுமையாக தாக்கியதை கண்டித்து நீர்கொழும்பு மறை மாவட்ட கிறிஸ்தவ மதகுருக்கள்,கன்னியாஸ்திரிகள் நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு பிராந்திய தலைமை பிதா சாந்த வெலிவிட்ட தலைமையில் நீர்கொழும்பு மாநகர சபை வளவில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மதகுருக்கள்,கன்னியாஸ்திரிகள் அங்கிருந்து பாதயாத்திரியாக கொழும்பு புத்தளம் பிரதான வீதியில் தெல்வந்த சந்தியை நோக்கி வந்து அங்கு அமைதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “உடல் ரீதியான, மானசீக ரீதியான கொடுமைகளை கண்டிக்கிறோம்”, “மிலான் பிதாவே நாம் உங்களுடன்” என்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர். மேலும் அவர்கள், ஜெபமாலையை தமது கைகளில் ஏந்தி ஜெபம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வண. பிதா சிவில் காமினி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, எந்தவொரு குடி மகனையும் தாக்கும் உரிமை பொலிஸாருக்கு இல்லை. பொலிஸார் வாகனத்தை நிறுத்தச் சொன்னதை தான் அவதானிக்கவில்லை என மிலான் பிதா கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்ள முடியும். காரணம் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் எதிர் திசையிலிருந்தே வந்துள்ளன.

பொலிஸ் என்பது நாட்டில் அமைதி, சட்டம், ஒழுக்கம், மக்களின் பாதுகாப்பை பேணும் நிறுவனம். பொலிஸார் வன்முறையை பாவிப்பதாக இருந்தால் பொலிஸில் ஒழுக்கக்கட்டுப்பாடு இல்லை என்பதே தெளிவாகின்றது. முழு பொலிஸ் திணைக்களத்தையும் குற்றம்சாட்டவில்லை.

நாம் இங்கு வந்து எதிர்ப்புத் தெரிவிப்பது பொலிஸாருக்கு எதிராகவோ வேறு எவருக்கும் எதிரிகவோ அல்ல. நாட்டில் சட்டம் ஒழுங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும். பொலிஸாருக்கு தேவையான விதத்தில் நடக்கமுடியாது. அதனை ஒவ்வொரு பொலிஸாரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறான செயல்பாடுகளின்போது நாம் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் நாட்டை சீர்படுத்த முடியும். அமைதியாக இருந்தால் பிழையான செயல்கள் மாறுவதுமில்லை. மாற்றமடைவதும் இல்லை என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *