இலங்கை

தமிழரசுக் கட்சி எம்.பி. சிறிதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி பறிப்பு!; அரசியல் குழுவின் ஆலோசனையை ஏற்க மறுத்ததால் இந்த முடிவு என்கிறார் சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழு தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அங்கு சுமந்திரன் மேலும் கூறுகையில் ,

பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே அவருக்கு வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் அரசியல் குழுவின் கூட்டத்தில் அந்த நேரத்தில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டார்.அந்த நேரத்தில் தேசியப் பட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கும் அந்த அரசியல் குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று பாராளுமன்றக் குழுத் தலைவர்(கொறடா) பதவியை டாக்டர் சத்தியலிங்கத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற நடவடிக்கை குழுவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.பாராளுமன்ற குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நாங்கள் நியமித்தோம்.

நேற்று(சனி) திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல்குழுவினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல் குழுவுக்கே இருக்கின்றது.எந்த குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கு அதிகாரம் அந்த குழுவுக்கு உண்டு.தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையினை ஏற்றுக்கொள்ள சிறிதரன் மறுத்ததன் காரணத்தினால் அரசியல் குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தினை மீளப்பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அரசியல்குழு அவர்மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அரசியல் குழு இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்ற அரசியல் பேரவையிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கியிருந்தது.சனிக்கிழமை சுமார் 4 மணி நேரங்கள் அதே கருத்தினை அவரிடம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே கட்சியின் எந்த உயர்குழு அவருக்கு அந்தப் பதவியை வழங்கியதோ அந்தக் குழுவின் ஆலோசனையினையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லையென்றால் அந்தப் பதவியை அவரிடமிருந்து எடுப்பது எனத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.

இதேநேரம் இது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் இது பற்றிக் கேட்டபோது, அவ்வாறான எந்த இறுதி முடிவும் இதுவரையில் எடுக்கவில்லையெனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *