கவிதைகள்

இரக்கமும் உன்னை ஏமாற்றலாம்…. கவிதை… அன்பு ஜெயா, சிட்னி

(பா வகை: எழுசீர் குறள்வெண் செந்துறை)

இரக்கம் தானே எல்லோர் மனத்தில்
இயல்பாய் உள்ள நற்குணமே!
பரந்து விரிந்த இயல்பைச் சிலரும்
பண்பே இன்றி ஏய்ப்பதேனோ! (1)

ஏய்ப்போர் எங்கும் இருப்பர் எனினும்
ஏழை எளியோர் உள்ளனரே,
ஆய்ந்தே அறிவ தெப்படி என்றே
அறிவுக் கெதுவும் எட்டவில்லை! (2)

குழந்தைக் கையில் ஏந்தி நின்றே
குறையைச் சொல்வோர் நிலைதன்னை
குழந்தை மனமும் பெற்ற மாந்தர்
குறையாய்க் காண்ப தெங்ஙனமோ? (3)

அறிவோம் இங்கே ஏய்த்தும் பிழைப்போர்
அளவே இன்றி இருப்பாரே
அறிந்தும் இரக்கம் என்னும் உணர்வும்
அலையாய்ப் பாய்ந்தும் வருகிறதே! (4)

கல்லாய் உள்ளம் கடவுள் படைத்தால்
கடந்தே செல்லும் வழியுண்டே
கல்லில் ஈரம் கசியப் படைத்தக்
கடவுள் தன்னைப் பழித்திடுவோம்! (5)

அன்பு ஜெயா, சிட்னி
அன்பு ஜெயா, சிட்னி

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *