ஆழகின் அருமை!… கவிதை…. ஜெயராமசர்மா

மடியில் தவளும் குழந்தை அழகு
மண்ணைத் தின்னும் பருவம் அழகு
தடக்கி விழுந்து நடக்கும் அழகு
தாவிப் பிடிக்கும் காட்சியும் அழகு
பல்லே இல்லாப் பருவம் அழகு
பார்க்க முளைக்கும் பல்லும் அழகு
முளைத்த பல்லால் கடிப்பதும் அழகு
கடித்த பின்னர் சிரிப்பதும் அழகு
நடக்கும் பருவம் வியப்பாய் இருக்கும்
விழுந்து எழுந்து நடப்பதும் அழகு
பிடித்து நடந்து பிடிக்கா நடந்து
எத்தனை திருப்பம் எத்தனை அழகு

முத்தாய் உதிரும் முதலாம் வார்த்தை
சித்தம் மயக்கும் திகைப்பை ஊட்டும்
எத்தனை இனிமை எத்தனை இன்பம்
எல்லாம் கொடுக்கும் சொத்தா யிருக்கும்
காலம் நகரும் வளர்ச்சி தொடரும்
பருவ மாற்றம் பிள்ளைகள் அடைவார்
ஆணாய் பெண்ணாய் அழகாய் நிற்பார்
அந்தப் பருவமும் ஆனந்தம் அளிக்கும்
மீசை முளைக்கும் ஆசை அணைக்கும்
பாவாடை தாவணி பலரை மயக்கும்
பள்ளிக் கல்வி உயரச் செல்லும்
படிப்பார் படிப்பார் பட்டமும் பெறுவார்
இளமை என்பது இனிப்பாய் தெரியும்
எத்தனை கனவுகள் கண்டு களிப்பார்
காலம் மாறும் காட்சியும் மாறும்
கல்யாணம் குடும்பம் கட்டிப் பிடிக்கும்
நாற்பது ஐம்பது தொட்டிடும் பருவம்
நரையொடு மூப்பும் நாடியே நிற்கும்
இளைப்பும் களைப்பும் இணைந்தே நிற்கும்
இளமை முதுமை இணைந்ததே வாழ்க்கை
பல்லோ இல்லா பிறந்தோம் அனைவரும்
சொல்லவும் முடியா மெல்லவும் முடியா
துணையுடன் வாழும் பருவமே அப்போ
இளமை அகன்றால் வருவது முதுமை
பல்லும் இருக்கா சொல்லும் இருக்கா
மெல்லவும் முடியா விழுங்கவும் முடியா
தாத்தா என்பார் பாட்டி என்பார்
தாங்கிப் பிடிக்க துணையே தேடுவோம்
முதுமை என்பதும் அழகின் முதிர்ச்சி
கனியே முதுமை கனிவே முதுமை
அனுபவம் என்பது முதுமையின் கொடையே
முதுமையின் அழகு நிறை நிலவாகும் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()