பலதும் பத்தும்

யாழ். சர்வதேச சட்ட மாநாட்டை 24ம், 25ம் திகதிகளில் நடத்த தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் 2024ம் ஆண்டில் முதல்முதலாக கரம்கோர்த்து முதலாம் யாழ்ப்பாண சட்ட மாநாட்டை ஒழுங்கு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது, 2025ம் ஆண்டில் சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து அதனை யாழ்ப்பான சர்வதேச சட்ட மாநாடாக பரிணாமிப்பதில் வெற்றி கண்டதுடன், தொடர்ந்து இவ்வாண்டு மூன்றாவது முறையாக இச்சர்வதேச சட்ட மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

அந்தவகையில் இம்மூன்றாவது சர்வதேச சட்ட மாநாடானது இரு தினங்களும் மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலைவரை இடம்பெறவுள்ளது.

ஆய்வு, மறுவடிவமைப்பு. மீள்நிர்மாணம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கலந்துகொண்டு மாநாட்டின் தொனிப்பொருள் சார்ந்ததான பல்வேறு விடயப்பரப்புகள் தொடர்பில் உரையாடவுள்ளனர்.

மாநாட்டின் முதல் நாளன்று பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரம்பிள்ளை துரைராஜாவும், கௌரவ விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தலைவர் நீதிபதி ரோகத்த அபேசூரியவும் சிறப்பு விருந்தினராக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளருமான சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் அன்றைய தினத்தின் பிரதம உரையாளர்களாக இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் நிர்வாக இயக்குனரான கலாநிதி மரியோ கோமெஸிம், பாரிஸ்டர் ஸாரா மண்டிவல்லா அக்பரால்டும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முதல்நாள் நிகழ்வின் மற்றுமொரு பிரதான அம்சமாக “சட்டத்தின் எதிர்காலம் ஆட்சி நிர்வாகம், தொழிநுட்பம், சமூகம் மற்றும் உலக பொருளாதாரம்” எனும் தொனிப்பொருளின் கீழான குழுக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலானது ஆட்சி நிர்வாகமும் சட்டவாட்சியும், சட்டமும் தொழிநுட்பமும், சமூக மற்றும் பண்பாட்டு பரிமாணங்கள், சூழலும் காலநிலை மாற்றமும், வணிகமும் எண்ணியல் பொருளாதாரமும் எனும் தலைப்புகளின் கீழ் நடைபெறவுள்ளதோடு குறித்த தலைப்புகள் தொடர்பில் முறையே சட்டத்தரணி லூவி கணேசநாசன், இலங்கை ஜிரிஎன் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஜிரிஎன் குழுமத்தின் உலகளாவிய பகிரப்பட்ட சேவைகள் தலைவர் அர்ஜுன நாணயக்கார,கலாநிதி பகீரதி ரசனென், பேராசிரியர் அ.சர்வேஷ்வரன் மற்றும் ஷெலானி.சி.டயாஸ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்

அதனை தொடர்ந்து யாழ் மண்ணின் பண்பாட்டுச்சுவடுகளை பிரதிபலிக்கும் பண்பாட்டு நிகழ்வொன்றும் அன்றைய நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது, அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 9 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

மாநாட்டின் இரண்டாம் நாளன்று பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவும், கௌரவ விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கலாநிதி, பிராங்க் குணவர்தனவும், சிறப்பு விருந்தினராக அரசாங்கத் துணைத் தலைமை வழக்குரைஞர் ஹரிப்ரியா ஜயசுந்தரவும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் அன்றைய நாளின் சிறப்புரைகளை ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரனும் பேராசிரியர் சாந்தி செகராஜசிங்கமும் வழங்கவுள்ளனர்.

இரண்டாம் நாளின் மற்றொரு பிரதான நிகழ்வாக ஆட்சி நிர்வாகமும் சட்டவாட்சியும், சட்டமும் தொழிநுட்பமும், சமூக மற்றும் பண்பாட்டு பரிமாணங்கள், சூழலும் காலநிலை மாற்றமும், வணிகமும் எண்ணியல் பொருளாதாரமும் எனும் தலைப்புகளின் கீழ் ஆய்வாரள்கள். தங்களின் ஆய்வுக்கட்டுரை சுருக்கங்களை முன்வைக்கவுள்ளனர்.

மாநாட்டின் ஓரங்கமாக “செயற்றிட்டங்களிலிருந்து பங்காளித்துவத்திற்கு தூண்டுகோலாக மக்கள் பங்கேற்பு” எனும் தொனிப்பொருளின் கீழான மாநாட்டு முன் சிறப்பு அமர்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது தை மாதம் 23ம் திகதி பிற்பகல் 3மணி முதல் 6 மணி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், பொறியியலாளர் அ. ரொபர்ட் பீரிஸ்,யாழ் பல்கலைக்கழகசமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர் வைதேகி நரேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு மாநாட்டு ஒழுங்கமைப்புக்குழுவினர் கோரியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button