கவிதைகள்

இறுதிப் பயணம் இன்பமாய் இருக்கும்!…. கவிதை… ஜெயராமசர்மா

ஆடிடும் ஆட்டம் அடங்கிடும் வேளை
தேடிய அனைத்தும் திரும்பியே பாரா
கூடியே குலவி கொஞ்சியே மகிழ்ந்தார்
தேடிய பொருளை பங்கிடத் துடிப்பார் !

அன்புடை மனைவி அழுதுமே நிற்பாள்
ஆசையாம் பிள்ளைகள் சேர்ந்துமே அழுவார்
உறவினர் உள்ளே இருப்பதை நோக்குவார்
அயலவர் புதினம் பார்த்திட வருவார் !

 

 

 

 

 

 

 

 

பிறந்தது என்பது பெரு வரமாகும்
வரமதை உரமாய் ஆக்கிட வேண்டும்
மற்றவர் அழுதிட வைத்திடும் பாங்கில்
வாழ்பவர் மடிவதை தடுத்திடல் முடியுமா ?

ஆணவம் நிறைந்து அகந்தைச் செருக்குடன்
ஆரையும் மதியா அதிகாரம் செய்து
கோடியாய் குவிப்பதும் மாடியில் இருப்பதும்
நிலையா வென்று நினைப்பவர் உண்டா ?

பட்டம் பதவி இஷ்டமாம் வாழ்க்கை
எத்தனை நாள்தான் இருக்கப் போகுது
மற்றவர் நோக கண்ணீர் வடிக்க
வந்தன அனைத்தும் சொந்தமே ஆகா !

பூமியில் பிறப்பது புண்ணிய மாகும்
தானம் செய்யலாம் தர்மம் செய்யலாம்
கோவிலைக் கட்டிச் சாமியை வைத்து
குடமுழுக் கிட்டுக் கொண்டாடி மகிழலாம்

பசிப்பார்க் குணவைக் கொடுத்து மகிழலாம்
பட்டினி என்பதை விரட்டியே அடிக்கலாம்
மூத்தவர்க் குதவலாம் மூர்க்கரைத் திருத்தலாம்
கண்ணீர் துடைக்கலாம் கைபிடித் தணைக்கலாம்

 

 

 

 

 

 

 

அன்பின் வழியில் அனைத்தையும் ஆற்றலாம்
அடுத்தவர் அகத்தில் அன்பை விதைக்கலாம்
ஆணவம் அகந்தை அடுத்தவர் நிந்தனை
அனைத்தையும் தவிர்த்தால் அனைவரும் ஏற்றுவார்

இறுதிப் பயணம் இன்பமாய் இருக்கும்
உறவுகள் ஊரவர் உண்மையயாய் அழுவார்
நாடும் போற்றும் ஏடும் போற்றும்
நல்லவர் எம்மைப் பிரிகிறார் என்று !

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி பணிப்பாளர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

2 Comments

  1. அடுத்தவர் மனத்தில் அன்பை விதைத்தால் அன்பு விருட்சம் அகிலம் காக்கும்.
    இறுதிக்காலம் இன்பமாய் இருக்கும். வாழும் பெருங்கலைக்கு வழியை அழகாய் சொன்ன அறிஞர் வாழ்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *