கவிதைகள்
திண்டாடிப் போகாமல் திளைத்திருப்பாய்!…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

வெள்ளிக் கிழமை விடிகாலை வேளையில்
வள்ளிமலையில் காத்திருந்தேன் கண்ணே
தள்ளாடிய மனமோ பற்பலவாய் நினைக்க
எள்ளி நகையாடி மகிழாது நேரம் கரையுதே
கொஞ்சும் சலங்கையொலி காதில் விழாது
மிஞ்சும் உன்னழகை கண்களும் பருகாமல்
வஞ்சிக்கொடி இடயாளை இன்னும் காணாது
நெஞ்சம் கனமாகி நிலையின்றி தடுமாடிடுதே
அத்தை மகளே என்னை ஆட்டிப் படைப்பதா
சித்திரமே நீ வராமல் என் சிந்தை குலைப்பதா
எத்தனை சொல்லிடினும் ஏன் இந்த தாமதமோ
பித்தனைப் போல் எனை ஆக்கிப் பார்த்திடவா
நல்லநேரம் உனை நான் பார்க்கும் நேரமாகும்
மெல்ல நடந்தாலே என்நெஞ்சு வலி எடுக்கும்
சொல்ல முடியலை தோகையே வேதனையை
வெல்லமாய் இனிக்கிறாயே நினைக்கையிலே
கண்டபின்னும் கண்ணே வாழாதிருப்பேனோ
விண்டபின்னே மணியே மொழியாதிருப்பேனா
அண்டமே அழிந்தாலும் அழகே நீ இருப்பாய்
திண்டாடி நான் போகாமல் திளைத்திருப்பாய்!

![]()