இலங்கை

யாழ்.நகரில் உள்ளக விளையாட்டு அரங்கு வருவதைத் தடுக்க முயற்சி; நீதிமன்றத்தில் வழக்கு என்கிறார் ஜனாதிபதி அனுர

மீண்டும் இந்த நாட்டிலே வடக்கிலோ தெற்கிலோ எந்த பகுதியிலும் எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதிபட கூறுகிறேன் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் வழங்கும் நிகழ்வில் கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் ஆரம்பித்து பல வருடங்கள் கடந்தாலும் இன்னமும் வீட்டு திட்டங்கள் செய்து முடிக்கப்படவில்லை. ஆகவே பூர்த்தியாகாத அந்த திட்டத்தை பூர்த்தி செய்வதற்காக தான் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

யாழ்ப்பாண மக்களாகிய நீங்கள் யுத்த காலத்திலும் இடம் பெயர்ந்து இருந்தீர்கள். யுத்தத்திற்குப் பிறகும் இடம் பெயர்ந்திருந்தீர்கள். நீண்ட காலமாக வீடு இல்லாமல் தமக்குரிய இடம் இல்லாமல் தொடர்ச்சியாக வாழ்வது இலகுவான காரியம் அல்ல.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடு அமைத்து கொடுப்போம். இந்தப் பகுதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்.

நீண்ட நாட்களாக இந்த பகுதியிலே இருந்த அரசியல் என்பது அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்லும் நிலைப்பாட்டில் தான் இருந்தது. அது தவறு இல்லை.

அரசாங்கம் இனவாதத்தை போதித்து அரசாங்கம் மக்களின் சொத்துக்களை களவெடுத்து, அரசாங்கம் பொது மக்களை பற்றி சிந்திக்காமல் இருந்து, அரசாங்கம் தம்மைப் பற்றி மட்டும சிந்திக்கும் போது, பொதுமக்கள் விலகுவதை எங்களால் தடுக்க முடியாது.

ஆகவே இலங்கை வரலாற்றில் ஆகவே முதல் தடவையாக பொதுமக்களுடைய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

விசேடமாக கடந்த காலத்திலே எமது அரசியலை எடுத்துக் கொண்டால் மக்கள் மத்தியிலே எமது கட்சி தொடர்பான சந்தேகங்கள் காணப்பட்டிருக்கின்றன. எம்மை ஆட்சிக்கு அமர்த்துவதற்கு வாக்களித்தாலும் சந்தேகத்தில் தான் வாக்களித்திருப்பீர்கள். இன்று அரசாங்கத்தை அமைத்து ஒரு வருடத்திற்கு சற்று அதிகமாக இருக்கிறோம்.இன்னும் அந்த சந்தேகம் இருக்கிறதா?

இன்று முதல் தடவையாக மக்களின் நம்பிக்கையுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நம்புகிறீர்கள் தானே?

முதலாவதாக வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களை மேம்படுத்த வேண்டும். ஆகவே அரசாங்கம் என்ற அடிப்படையிலே செய்யக்கூடிய அனைத்தையும் நாம் செய்வோம்.

வீடில்லாதவர்களுக்கு வீட்டை வழங்குவோம். பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி உரிமை கொடுக்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கி உள்ளோம். வருமானத்துக்கு வழியை அமைப்போம். விசேடமாக விவசாயத் துறை தென்னை பயிர் செய்கை, கடற்றொழில் தொடர்பாகவும் கவனம் செலுத்துவோம்.

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பது அனைத்து துறைகளையும் உயர்த்துவதாகவும் வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும் அமையும்.அவற்றிற்காக அரசாங்கம் வேலை செய்யும்.

நீண்ட நாட்களாக எனது வாழ்க்கையில் கணிசமான பங்கை எடுத்தால் யுத்தத்தில் தான் நாம் வாழ்ந்தோம். முரண்பாடுகளுடன் வாழ்ந்தோம். வைராக்கியத்துடன் வாழ்ந்தோம். தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாதிகள் சந்தேகத்துடன் பார்த்தார்கள்.

சிங்கள மக்கள் மீது தமிழ் இனவாதிகள் சந்தேகத்துடன் பார்த்தார்கள். அந்த முரண்பாட்டினால் யாருக்கு நன்மை கிடைக்கவில்லை. யுத்தத்தில் நமக்கு என்ன மிஞ்சியது?

வீடுகள் இல்லாத குடும்பங்கள், பெற்றோர்களை இழந்த பிள்ளைகளே. உறவுகளை இழந்த குடும்பங்களே காணப்பட்டது.வடக்கிலும் தெற்கிலும் பாதிக்கப்பட்ட மக்களே எஞ்சினர்.

அழிவுகளின் பின்னால் அரசியல் தான் இருந்தது. அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அது நடத்தப்பட்டது. சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் உசுப்பேற்றினார்கள்.

இன்றும் சில இடங்களில் தொல்பொருள் நிலையத்தை மையமாக வைத்து மத ஸ்தானத்தை மையமாக வைத்து மத முறுகல் நிலையை ஏற்படுத்த வேண்டும் என முயற்சிக்கப்படுகிறது.

நான் ஒரு உறுதி மொழியை வழங்குகிறேன். மீண்டும் இந்த நாட்டிலே வடக்கிலோ தெற்கிலோ எந்த பகுதியிலும் எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதிபடக் கூறுகிறேன்.

சகோதரர்களாக அமைதியாக ஒற்றுமையாக வாழ நல்ல இனவாதமற்ற நாடு தேவை. அதேபோன்று சிறப்பான பொருளாதரத்துடன் சந்தோஷமான வாழ்க்கை தேவை.

யாழ்ப்பாணத்தில் சிறப்பான விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு நாங்கள் நிதி உதவி செய்துள்ளோம். அரசாங்க அதிபருடன் கதைத்து அந்தத் திட்டத்தை இந்த வருடத்தில் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறோம்.

பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கு சந்தோசமாக பொழுதைக் கழிக்க யாழ்ப்பாண நகரத்தில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்க திட்டமிட்டோம். அதற்கு எதிராக அரசியல்வாதிகளுடாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு தேவை என்ன? உள்ளக விளையாட்டிடம் உங்களுக்கு தேவையா இல்லையா?

அவர்கள் மக்களுக்கு எதிரான அரசியலைக் கொண்டு செல்கிறார்கள். நாங்கள் மிக விரைவாக அந்த வழக்கை நிவர்த்தி செய்வோம். அந்த இடத்தில் அதற்கு சார்பான இடத்தில் அமைப்பதற்கு இந்த வருடத்திலேயே திட்டமிடுவோம்.

எமது நாட்டை எடுத்துக் கொண்டால் சுற்றுலா துறைக்கு பெரிய பங்கு இருக்கிறது. யாழ் மாவட்டத்திலே சிறப்பான கடல் கரையோரங்கள் உள்ளது. மக்களை கவரக்கூடிய இடங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த சுற்றுலாத்துறை ஒன்று நமது பகுதியிலே உருவாக வேண்டும்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய குறைபாடுகளை திருத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். வேகமாக விரைவிலே காங்கேசன்துறை துறைமுகத்தை விருத்தி செய்வோம். இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.எமது தேவை சிறப்பான சுற்றுலாத்துறையை உருவாக்குவதற்காக திட்டமிட்டு செயல்படுவோம்.

பிள்ளைகளுக்கான சிறப்பான தொழில் வாய்ப்பை வழங்க நல்ல ஒரு பொருளாதாரமும் தேவை பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாக அதற்காக செயற்படுவோம்.

இங்கு வந்த தாய் தந்தையர்கள் சகோதரர்கள் தமது வாழ்க்கையில் முதல் தடவையாக, அமைச்சர் ஜனாதிபதிகள் அமைச்சின் செயலாளர் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தில் கலந்து முதல் தடவையாக இருக்கும். அப்படித்தானே?

எங்களுக்கு தேவை இந்த சிதறடிக்கப்பட்ட மனங்களையும் உள்ளங்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். நமது பரம்பரை யுத்தம் செய்து கொண்டார்கள். எமது வருங்கால பரம்பரையும் முரண்பட வேண்டுமா?

துணிச்சலான முடிவு எடுத்தீர்கள் தெரியாத எம்மை நம்பி நம்பிக்கையுடன் ஒன்று சேர்ந்தீர்கள். நாங்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம். உங்களை ஒருபோதும் கைவிடமாட்டோம் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் நாம் பயணிப்போம் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *