நல்லூரில் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வங்கக் கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (16 ) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள கிட்டுப் பூங்காவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கிட்டுவின் உருவப் படத்துக்கு முன்பாக ஈகச் சுடரேற்றப்பட்டு, மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது தியாகதீபம் திலீபன் ஆவணக் காப்பத்தினால் உருவாக்கப்பட்ட ‘கிட்டு ஒரு தனி மனித வரலாறு’ எனும் தொனிப் பொருளுடன் கூடிய தளபதி கிட்டுவின் வாழ்வியல் தொடர்பான ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்.மாநகர சபையின் முதல்வர் திருமதி.மதிவதனி விவேகானந்தராசா, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் மு.கோமகன், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
![]()