இலங்கை

திருமலை புத்தர் சிலை சம்பவத்தில் சிறையிலுள்ள தேரர் உண்ணாவிரதம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.

புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவுவரை உணவு, நீர் அருந்தாமல் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையோரமாக அனுமதி இன்றி அமைக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கும், அப்பகுதியில் புத்தர் சிலையை வைத்து குழப்ப நிலையை தோற்று வித்தமைக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் 11 பேருக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பௌத்த பிக்குகளும், 5 சிவிலியன்களுமாக 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு நீதிமன்றுக்கு வருகை தராத இருவருக்கு பிடியாணையும் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

புதன்கிழமை கைது செய்யப்பட்ட 4 பௌத்த பிக்குகளும் தனியான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மாத்திரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.

கரையோர பாதுகாப்புத் திணைக்களம் பல இடங்களில் தனது சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திருகோணமலை கடற்கரைக்கு அருகில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரைக்கு மாத்திரம் தனது சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது. அவருக்கு ஆதரவாக தென் பகுதியில் இருந்து பல முக்கியஸ்தர்களும் வருகைதருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதன்கிழமை இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின்போது குறித்த குற்றத்தை ஒப்புக் கொண்டு குறித்த சட்ட விரோத கட்டுமானத்தை அகற்றி குறித்த வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதற்கு எதிராளிகள் தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.

உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

இதேவேளை நேற்று (15) மாலை 6மணியளவில் புல்மோட்டை அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவங்ஸ நாயக்க தேரர் பலாங்கொடை கஸ்ஸப தேரருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *