இலங்கை

தையிட்டியில் விகாரை இல்லாத காணிகளை முதலில் விடுவிக்கவும்; வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர்

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது நல்லெண்ண அடிப்படையில் தையிட்டியில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க வேண்டும். ஏற்கனவே இணங்கிய இரண்டு ஏக்கரை முதலில் விடுவித்து ஏனைய பகுதிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காணிகளை பகுதி பகுதியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் கூட அந்த அறிவித்தல் சம்பந்தமாக ஏற்கனவே எல்லைகளை பின்னகர்த்தி ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்டு வேலிகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன . இதன்மூலம் இந்த காணி விடுவிப்பானது கேள்விக் குறியாக மாறியுள்ளது.

விகாரையின் மேற்கு பகுதியில் உள்ள பவானி வீதியுடன் இணைந்த இரண்டு ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அந்த ஒப்பந்தம் தையிட்டி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்கப்படாமல் மாவைகலட்டி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்கப்பட்டது.அந்த ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

விகாரை இல்லாத காணிகள் 16 பேருக்கு சொந்தமாக உள்ளன . ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது அவை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அங்கு எந்த கட்டுமானமும் இல்லை.

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கொள்கை அடிப்படையில் மக்கள் காணி மக்களுக்கு என அரசாங்கம் கூறினாலும் விகாரை அமைந்துள்ள காணி இது வரை விடப்படவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் கூட கடந்த இரண்டு போராட்டங்களை வலி வடக்கு பிரதேச உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போதிலும் அதற்கு எதிராக பலாலி பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் இருக்கிறது.

மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளரை அழைத்து காணி விடுவிப்பு தொடர்பாக ஒரு கூட்டம் நடைபெற்றாலும் அந்த கூட்டத்தில் இலங்கை பௌத்த பிக்குகள் சம்மேளன பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரதேச காணி உரிமையாளர்கள் யாரும் அழைக்கப்படாமல் அந்த காணிகளை அவர்களுக்கு வழங்கவில்லை என பிழையான முறையில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது நல்லெண்ண அடிப்படையில் தையிட்டியில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க வேண்டும். ஏற்கனவே இணங்கிய இரண்டு ஏக்கரை முதலில் விடுவித்து ஏனைய பகுதிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் மூலம் ஒரு சமாதான நிலமையை உருவாக்கவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியும். ஜனாதிபதி தைப்பொங்கலுக்கு வரும்போது திஸ்ஸ விகாரை அமைந்துள்ள மக்களுடைய காணியை மக்களுக்கு வழங்கி தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *