கவிதைகள்

வேர்களின் உரமே விருட்சத்தின் வளர்ச்சி!… கவிதை…. ஜெயராமசர்மா

பூத்துக் குலுங்கி நிற்கும் மரங்கள்
காயும் கனியும் தந்திடும் மரங்கள்
மண்ணின் மேலே நிமிர்ந்து நிற்க
வேர்கள் என்பதை நினைப்பது முக்கியம்

வேர்கள் கண்ணுக்குத் தெரியவதே இல்லை
விருட்சம் மட்டுமே வியப்பாய் தெரியும்
வேராய் இருப்பார் நினைவில் நிற்கார்
விருட்சமாய் வளர்ந்தார் பெருமையால் மகிழ்வார்

 

 

 

 

 

 

 

உரமாய் இருப்பார் வரமாய் இருப்பார்
ஒருவித சுகமும் வாழ்வினில் காணார்
வேராய் இருந்தும் வெளியில் தெரியார்
விருட்சமாய் வளர்வார் நினையார் அவரை

பெற்றவர் பிள்ளைகள் வேர்களே ஆவார்
பிள்ளைகள் உயர பெற்றவர் உழல்வார்
பிள்ளைகள் விருட்சமாய் வளர்ந்ததன் பின்னால்
வேர்களை எண்ணா வாழ்வினைப் பார்ப்பார்

வேர்களின் உரமே விருட்சத்தின் வளர்ச்சி
வேர்கள் இல்லையேல் விருட்சமே இல்லை
காயும் கிடைக்கா கனியும் கிடைக்கா
பூத்துக் குலுக்கும் பொலிவும் கிடைக்கா

அன்புடை உறவுகள் அனைவரும் வேரே
அறிவினை நல்கும் ஆசான்கள் வேரே
பெற்றிடும் தாயும் பேணிடும் தந்தையும்
ஆணிவேர் பக்கவேர் ஆகியே நிற்கிறார் !

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்,  அவுஸ்திரேலியா

Loading

One Comment

  1. மனிதர்கள் மறப்பதெல்லாம் உத்தமர் மறவார். வேரை மறந்த விருட்சங்களுக்கு உறை க்கும்படி உரைத்தீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *