தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பாதிப்புக்களைச் சந்திக்கும் நிலை வரலாம் !

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் யாழ்.மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாகவும், இதன் தாக்கம் காரணமாக யாழ்.மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாதவளவு பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடுமெனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றுப் புதன்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது நாட்டின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர உள்ளது. இது மணிக்கு 9 கிலோ மீற்றர் வேகத்தில் நகரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசுக் கூடும்.
குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வு மண்டலமாக இது அமைகின்றது. ஆனாலும், கடந்து சென்ற தாழ்வு மண்டலங்களை விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் நகர்வுப் பாதை கடல் பகுதியாகவிருந்தாலும் வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் மிகக் குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 08(இன்று ) , 09(நாளை ) , 10 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
09,10 ஆம் திகதிகளில் யாழ்.மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் தாக்கம் டித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாகவிருக்குமென எதிர்பார்க்க முடிகிறது.
இந்த பாதிப்பால் விவாசாயிகள் பாரிய பயிரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே துறைசார் அதிகாரிகள் இதுதொடர்பாகதத் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது. எனவே, பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமெனவும் குறிப்பிட்டார்.
![]()