உலகம்

கிரீன்லாந்து மீது அமெரிக்கா கண்; உலக அரசியலில் புதிய பதற்றம்

கிறீன்லாந்து தீவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், இது குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) அடுத்த வாரம் டென்மார்க் அரசாங்கத்தைச் சந்திக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கிறீன்லாந்தை விலைக்கு வாங்குவது அல்லது அதன் கட்டுப்பாட்டைப் பெறுவது குறித்து நீண்டகாலமாக ஆர்வம் காட்டி வரும் ட்ரம்ப், நேற்று இது குறித்துப் பேசுகையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

“கிறீன்லாந்தை அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இராணுவ நடவடிக்கையைப் பயன்படுத்துவதும் எப்போதும் ஒரு தெரிவாகவே உள்ளது” என ட்ரம்ப் தெரிவித்தார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும், டென்மார்க் மற்றும் கிறீன்லாந்து மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தினால் ஏற்பட்டுள்ள இராஜதந்திரப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென் (Lars Lokke Rasmussen), அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பிற்காக டென்மார்க் மற்றும் கிறீன்லாந்து அரசாங்கங்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து கிறீன்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபெல்ட் (Vivian Motzfeldt) தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில்,

“கிறீன்லாந்து குறித்து அமெரிக்கா விடுத்துள்ள கடுமையான அறிக்கைகள் குறித்து விவாதிப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான கனிம வளங்கள் மற்றும் ஆர்ட்டிக் பகுதியில் உள்ள அதன் முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் இருப்பிடம் காரணமாக, அமெரிக்கா கிறீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புகிறது.

ஆனால், கிறீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்பதில் டென்மார்க் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *