இலங்கை

தையிட்டி போராட்டம்; பொலிஸாரே குற்றவாளிகள்

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் சட்ட விரோதமான முறையில் பொலிஸார் ஆரம்பித்து இருக்கிறார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பில் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நானும் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தாவும் கலாநிதி குருபரனும் ஆஜராகியிருந்தோம்.

நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமான முறையில் பொலிஸார் ஆரம்பித்து இருக்கிறார்கள். இப்படியான நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பொலிஸாருக்கு சட்டத்தில் உரித்து கிடையாது.

இந்த அமைதிவழியான ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு இலங்கை அரசியலமைப்புடன் தீர்க்கப்பட்ட பல வழக்குகளிலும் உரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் அப்படியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் அந்த தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருக்கிறது. அது நடைபெறுகின்ற போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அனுசரணையாக பொலிசார் உதவி செய்ய வேண்டும் என்று சொல்லி நீதிமன்றத் தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினோம்.

இந்த 106ம் பிரிவின் கீழே எடுக்கப்படுகின்ற கட்டளைகள் முறையான கட்டளை அல்ல. அதாவது சில சில விடயங்கள் சம்பந்தமாக, வீதிக்கு குறுக்கே மரம் விழுந்திருந்தால்

ஓடுகிற நீர் பாதையை யாராவது மறித்திருந்தால், பொதுமக்களுக்கு இடைஞ்சலாக யாராவது செயற்படும்

ஏதாவது சம்பவங்கள் இடம் பெற்றால் மட்டும்தான் பொதுத் தொல்லையை கட்டுப்படுத்தலுக்கான அத்தியாயம் இருக்கிறதே தவிர சட்டபூர்வமாக ஜனநாயக உரிமையை பாவித்து செய்யப்படுகிற ஆர்ப்பாட்டங்களுக்கு அந்தப் பிரிவை உபயோகப்படுத்த முடியாது என்பதை உரிய நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கொள்காட்டி நாங்கள் மூன்று பேரும் சொல்லியிருந்தோம்.

பொலிஸார் முறைகேடாக இந்த விடயத்தில் நடந்திருக்கிறார்கள். பொலிஸார் கைது செய்த விதமே பிழை. அவர்கள் தாங்களாகவே வீதியை மறித்து விட்டு மக்கள் வீதியை மறித்ததாக நீதிமன்றுக்கு தகவலை கொடுத்தது என பல விடயங்களை சொல்லியிருந்தோம். இந்த விடயங்களை கருத்தில் கொண்டு இந்த தகவலை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தோம்.

விசேடமாக காணி உரிமையாளர்களும் இந்த வழக்கில் இருக்கின்றார்கள். சந்தேக நபர்களாக காட்டப்பட்டுள்ளார்கள். தன்னுடைய காணியை திருப்பித் தருமாறு கேட்பதற்கு காணி உரிமையாளருக்கு உரித்து இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

சமாதானத்தை பேணுவதற்காக அவர்கள் பிணைமுறியை கைச்சாத்திட வேண்டும் என இன்னொரு வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. சமாதானத்தை இவர்கள் குலைக்கவேயில்லை. இரு தரப்பினர்கள் இடையே மோதல் என்று சொன்னால் இன்னொரு தரப்பை நிறுத்தியிருக்க வேண்டும். அது நிறுத்தப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த விடயத்திலே முறைகேடாக அவர்கள் தான் சட்டவிரோதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.

நீதவான் பொறுமையாக எங்கள் அனைவருடைய சமர்ப்பணங்களையும் செவிமடுத்த பிறகு கட்டளைக்காக பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்திருக்கிறார். அதுவரையிலும் தங்களுடைய சொந்த பிணையிலேயே அவர்கள் வெளியே போகலாம் என்று உத்தரவையும் கொடுத்திருக்கிறார் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *