இலங்கை

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் வெனிசுலாவின் நிலைமை இலங்கைக்கும் வரலாம்!

வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு முழு உலகையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இலங்கையுடன் அமெரிக்கா செய்துகொண்ட பாதுகாப்பு இணக்கப்பாடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் மூலம் வெனிசுலா, கொலம்பியா பக்கம் டொனல்ட் டிரம்பின் பார்வை திரும்புவதை போன்று இலங்கை மீதும் அவரின் பார்வை திரும்பலாம் என்றும், இதனால் அரசாங்கம் அந்த உடன்படிக்கைகளில் என்ன உள்ளன என்பதனை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளரான வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக கொழும்பில் அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வசந்த முதலிகே இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்காவானது வெனிசுலாவுக்குள், அந்நாட்டு இறைமையையும் மதிக்காது அத்துமீறி நுழைந்து அங்கு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டு ஜனாதிபதியையும் கைது செய்துள்ளது. ஜனநாயக வரலாற்றில் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கடந்த காலங்களில் காசா, இரான் போன்ற நாடுகளுக்குள் அமெரிக்கா புகுந்துள்ளது. இவ்வாறாக எல்லா நாடுகளுக்கும் புகுவதற்கு முடியும் என்பதனையே இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. இதனால் ஜனநாயகம், இறைமைக்கு மதிப்பளிக்கும் எந்த நாட்டுக்கும் அமெரிக்கா ஜனாதிபதியின் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது.

வெனிசுலாவில் போதைப் பொருள் உற்பத்தி அதிகமாக உள்ளதாகவும், இது அமெரிக்காவுக்கு பாதிப்பாக அமைகின்றது என்றும், இதனாலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் இதுவல்ல காரணம். எண்ணெய் மீதான பேராசையே காரணமாகும். இதற்காகவே அங்கு அத்துமீறி நுழைகின்றனர்.

உக்ரேன் யுத்தம், காசா யுத்தம் போன்று இப்போது வெனிசுலா யுத்தம் என்று வந்து அடுத்ததாக கொலம்பியா பக்கம் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் டிரம்ப் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் பல நாடுகள் மீது திரும்புவார்.

குறிப்பாக சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையுடன்,அந்த நாட்டு தூதுவர் ஜுலி சங் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டார். அத்துடன் அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரியொருவர் இலங்கை அரசாங்கத்துடன் போர் இணக்கப்பாட்டு உடன்படிக்கையொன்றை செய்தார். ஆனால் இலங்கையுடன் அவர்கள் செய்த போர் இணக்கப்பாடு என்ன என்று மக்களுக்கு தெரியாது. ஜுலி சங்க் நினைத்த நேரத்தில் பெலவத்தைக்கு சென்று அரசாங்கத்துடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திடுகின்றார். அவ்வாறான உடன்படிக்கைகளில் உள்ளவை தொடர்பில் நாட்டுக்கு கூறப்படுவதில்லை.

இந்நிலையில் அமெரிக்கா கொலம்பியா பக்கம் திரும்பும் போதும், அமெரிக்கா வெனிசுலாவுக்குள் நுழையும் போதும், அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் மீது பார்த்துக்கொண்டிருக்கையிலும், இலங்கை பக்கத்திலும் திரும்பிப்பார்க்கும் நாள் தொலைவில் இல்லை.

அதாவது தற்போதைய அரசாங்கம் அதற்கு தேவையான சகல உடன்படிக்கைகளையும் கைச்சாத்திட்டு கொடுக்கின்றது.

இந்த அரசாங்கம் இந்தியாவுடன் ஏப்ரல் மாதத்தில் செய்த உடன்படிக்கைகள் தொடர்பிலும் நாட்டுக்கு கூறவில்லை. அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள போர் இணக்கப்பாட்டையும் நாட்டுக்கு கூறவில்லை. இவ்வாறான நிலைமையில் அரசாங்கம் அமெரிக்காவின் செயற்பாடு தொடர்பில் எதனையும் கூற முடியாது இருக்கின்றது. ஜுலிசங்கின் மனதை வலிக்கச் செய்ய முடியாமல் அரசாங்கம் இருக்கின்றது. இதனால் அமைதியாக இருக்காமல் இறைமையுடைய நாட்டின் மீது கைவைப்பது தவறானது என்று கூறுங்கள் என்பதுடன், அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *