நீதியான விசாரணைக்கு ஹரிணி விலக வேண்டும்; உதய கம்மன்பில வலியுறுத்து

கல்வி மறுசீரமைப்பில் 6 ஆம் தர பாடப் புத்தகத்தில் தவறான இணையத்தள முகவரி உள்ளடக்கப்பட்ட விடயம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலகாமல் நடத்தப்படும் விசாரணைகள் நீதியானதாக இருக்காது என்றும், இதனால் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக அமைக்கப்பட்டுள்ள ‘மாபெரும் மக்கள் குரல்’ அமைப்பினால் திங்கட்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் ஓரின சேர்க்கை உரிமை தொடர்பில் அடிக்கடி கதைத்த செயற்பாட்டாளராகவும், அது தொடர்பான அரசசார்பற்ற நிறுவனமொன்றின் பிரதானியாகவும் இருந்துள்ளார். இவ்வாறான நிலைமையில் பாடப்புத்தகத்தில் இவ்வாறான ஒரு விடயம் உள்ளமையினாலேயே பிரதமர் மீது சந்தேகங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலைமையில் பிரதமர் குறிப்பிட்ட பதவியில் இருந்து விலகாமல் நடத்தப்படும் விசாரணைகளை நீதியான விசாரணையாக பார்க்க முடியாது. சில நாடுகளில் ரயில் விபத்து நடந்தால்கூட விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலகுவர். ஆனால் இங்கே பிள்ளைகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான விடயம் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பில் இப்போதும் தெளிவுபடுத்த முடியாமல் சீஐடியின் உதவியை நாடியிருப்பவரிடம் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது. அவர் தனது முடியாமையை வெளிக்காட்டிவிட்டார். பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், நீதியான விசாரணைக்காகவும் பிரதமர் பதவி விலக வேண்டும்.
சமூகத்தினால் பிரதமர் மீது விரல் நீட்டப்படும் நிலையில், ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் காணப்படும் விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிடப்படவில்லை. இதன்மூலம் உண்மையான சந்தேக நபர் யார் என்பதனை அரசாங்கத்தை வெளியிட வேண்டும். அந்த அறிக்கையை வெளியிடாமல் இருப்பதானது பிரதமரை பாதுகாப்பதற்காகவா என்ற சந்தேகங்கள் எழுகின்றன என்றார்.
![]()