கவிதைகள்

மனதைத் திறந்து காட்டிட வேண்டும்!… கவிதை… ஜெயராமசர்மா

மன்னிக்க நினைத்தால் மன்னிக்க வேண்டும்
வாழ்த்திட விரும்பினால் வாழ்த்திட வேண்டும்
மனத்தினில் தேக்கி வைத்திடல் வேண்டாம்
மனதைத் திறந்து காட்டிட வேண்டும்

ஆத்திரம் வந்தால் அடக்கிட வேண்டாம்
கொட்டியே தீர்த்தால் குளிர்ந்திடும் அனைத்தும்
அழுகை பெருகினால் அழுதிடல் அவசியம்
அடக்கினால் அனைத்தும் அணுவாய் மாறும்

கற்றவர் யாவரும் பெரியவர் அல்லர்
கற்றதைக் கருத்தில் எடுப்பவர் பெரியவர்
நிற்பதும் நடப்பதும் நெறியாய் இருப்பதே
கற்றவர் இலக்கணம் என்பதே உண்மை

உறவு என்பது உபசாரம் அன்று
உறவு என்பது உயர் நிலையாகும்
அன்பால் மலர்வதே ஆனந்த உறவு
ஆசை வார்த்தைகள் நல்லுற வன்று

நடிக்கும் உறவு கலைந்திடும் நிச்சயம்
நம்பகத் தன்மை குலைந்தால் துன்பமே
துடிக்கும் உணர்வுடன் உறவுகள் இருந்தால்
தொடரும் உறவாய் தொடரும் தொடரும்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

2 Comments

  1. “உறவு என்பது உயர்நிலை” உயர்ந்த வார்த்தை கூறிய ஐயா வாழ்க.
    “கற்றவர் யாவரும் பெரியவர் அல்லர்
    கற்றதைக் கருத்தில் எடுப்பவர் பெரியவர்” உன்னத கருத்தை வழங்கிய ஐயாவிற்கு வணக்கங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *