இலங்கை

புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க முடியாத நிலையில் அநுர அரசு! நாமல் ராஜபக்ச கடும் விமர்சனம்

முந்தைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்தவர்கள் இன்று அதே கொள்கைகளையே அதிக ஆர்வத்துடன் அமுல்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த விசேட நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…

அரசாங்கம் வரிகளை அதிகரிப்பதில் காட்டும் ஆர்வத்தை மக்களின் வருமானத்தை உயர்த்துவதிலோ அல்லது சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களைப் பலப்படுத்துவதிலோ காட்டவில்லை.

மாறாக இத்தகைய நிதிக் கொள்கைகளால் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, ஏற்கனவே நாட்டில் உள்ள முதலீட்டாளர்களும் வெளியேறி வருவதாக நாமல் ராஜபக்ச கவலை வெளியிட்டார்.

பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் கூட அரசாங்கம் முறையான திட்டமிடல் இன்றிச் செயற்படுவதாகவும், கல்வி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் பதவி விலகுவது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் கலாசாரம் மற்றும் மத விழுமியங்களைப் புறக்கணித்து மேலைத்தேய நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.

அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், பொலிஸ் மற்றும் சட்டத்துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை முடக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

முதலீடுகள் மற்றும் அபிவிருத்திகள் தடைப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தனது குழுவுடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க முறையான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *