தூய்மையுடன் வாழவே நினைக்க வேண்டும்!… கவிதை… ஜெயராமசர்மா

கல்லான மனமும் கசிந் துருகும்
கனிவான சொற்கள் மலரும் போது
கேளாத செவியைக் கேட்க வைக்கும்
ஆழ நிறை அன்பான வார்த்தைகளே
சொந்தங்கள் வாழ்வினிலே சுகத்தை நல்கும்
சுயநலத்தை பெரிதெனவே கொள்ளா வேளை
பந்தங்கள் பாசங்கள் நிறைந்து நின்றால்
சொந்தங்கள் என்றுமே சுகத்தை நல்கும்
எதிர்பார்ப்பு என்னாளும் ஏக்கம் காட்டும்
இயன்றவரை ஏற்றதையே செய்ய வேண்டும்
வருமென்று மனமெண்ணிச் செய்து நின்று
வாழ்வினிலே மனம்வருந்தி நிற்க வேண்டாம்
கருணையினைக் கண்களிலே காட்ட வேண்டும்
கனிவுடனே எவருடனும் பேச வேண்டும்
துணிவுடனே துட்டரினை எதிர்க்க வேண்டும்
தூய்மையுடன் வாழவே நினைக்க வேண்டும்
சினமடக்கி வாழுதல் சிறந்த வாழ்வு
சின்னத்தனம் கடிந்திடுதல் சிறப்பை நல்கும்
மனம்போன போக்கினிலே போக வேண்டாம்
வாழ்வாங்கு வாழவே எண்ண வேண்டும்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()
அவ்வையார், வள்ளுவர் இவரெல்லாம் சொன்னதை இன்று நமக்கு சொல்வதற்கோர் அறிஞர் வந்தார். வணக்கங்கள்.