புலிகளுக்கு எதிரான போரில் உதவிய பிள்ளையான், டக்ளஸை சிறையிலிட்டு செய்நன்றி மறந்தது சிங்கள இனம்!

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் உதவிகளை வழங்கிய சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை சிறையில் அடைத்து செய்நன்றி மறந்த இனமாக நாங்கள் மாறி விட்டோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனிய புத்தாண்டாக அமையட்டும் என்று புத்தாண்டில் வாழ்த்துவதன் ஊடாக இந்த புத்தாண்டு இனிமையாகிவிடாது. அது இனிமையாக வேண்டுமென்றால் இனிமையான விடயங்கள் செய்ய வேண்டும். குறிப்பாக இந்த நாட்டில் 30 வருட யுத்தம் நடந்தது. அந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்த தலைவர்கள் இப்போது மறக்கப்பட்டுள்ளனர். அந்த யுத்தத்தில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்கள் சிப்பாய்களாக மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் அச்சுறுத்ததையும் பொருட்படுத்தாமல் உதவிய தமிழர்கள் இருவர் இருந்தனர். பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே அவர்களாவர். இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நின்றவர்கள். ஆனால் விடுதலைப் புலி டயஸ்போராக்களின் தேவைகளுக்காக இவர்கள் இருவரும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் செய்நன்றி மறந்த இனமாக மாறியுள்ளோமா என்ற சந்தேகங்கள் உள்ளன. இவர்கள் இருவரும் சிறையில் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அத்துடன் புத்தாண்டு இனிமையாக வேண்டுமென்றால் எதிர்கால சந்ததியான மாணவர்களும் சரியான பாதையில் அனுப்பப்பட வேண்டும். ஆனால் கல்வி மறுசீரமைப்பில் அந்த மாணவர்களின் மனோநிலையை திரிபுபடுத்த முயற்சிக்கின்றனர். இவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்க முயற்சிக்க கூடாது. அவ்வாறு செய்தால் இந்த வருடமும், எதிர்காலமும் இனிமையாக மாறாது.
அதேபோன்று மக்கள் மீது வரி சுமையை சுமத்துவதாலும், ஊழல் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்குவதாக கூறி, இந்த நாட்டை கட்டியெழுப்பிய தலைவர்களை திருடர்களாக கூறி மக்களை ஏமாற்றுவதாலும் இந்த நாட்டுக்கு ஆரோக்கியமாக அமையாது என்றார்.
![]()