இலங்கை

தமிழ் மக்கள் அரசியலில் விழிப்படையாவிட்டால் ஆபத்து அருட்தந்தை சத்திவேல் சுட்டிக்காட்டு

தமிழ் தேச மக்கள் அரசியல் விழிப்படையாவிட்டால் அரசியல் ரீதியிலான முள்ளிவாய்க்காலை வெகு விரைவில் சந்திக்கும் நிலை ஏற்படும். என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கின் தையிட்டியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கு விகாரை முலாம் பூசப்பட்டு புனிதமாக்கப்பட்டுள்ளது. அதனையே தொடர்ந்து பாதுகாக்கும் நோக்கிலேயே விகாரை அகற்றப்பட மாட்டாது. பாதிக்கப்பட்டோருக்கு மாற்றுக் காணி மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் சந்திரசேகரன் ராமலிங்கம் அவர்கள் ஆட்சியாளரின் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இது அரச பயங்கரவாதத்தினை பாதுகாக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அகங்காரத்தையும் ஆணவத்தையுமே வெளிப்படுத்துகின்றது.

கடந்த கால ஆட்சியாளர்களை போன்று தேசிய மக்கள் சக்தியும் இந்த அரசியலுக்குள் தொடர்ந்து குளிர் காய்ந்த தமது அரசியலை முன்னெடுக்க விரும்புகின்றது.

பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அநீதியான முறையில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உளவியல் ரீதியில் தாக்கத்திற்கு உட்பட்ட தமிழர்களுக்கும் நீதியை நிலைநாட்ட விரும்பாத தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எத்தகைய அரசியல் நீதியை நிலைநாட்ட போவதில்லை.

சட்டவிரோத விகாரை கட்டிடம் தொடர்பான அரசாங்கத்தின் முடிவை ஒரு தமிழ் அமைச்சரைக் கொண்டே தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இதுவே அவர்களின் அரசியல் நரித்தனமாகும்.

தமிழர்களுக்கு எதிராக சந்திரிக்கா அரசாங்கம் கதிர்காமர் அவர்களை பாவித்தது போன்று தேசிய மக்கள் சக்தி ராமலிங்கம் சந்திரசேகரனை சின்ன கதிர்காமராக பாவிக்கின்றது.

மேலும் இவர்கள் வடக்கு கிழக்கெங்கும் குட்டி கதிர்காமர்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.

தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிரான அரசியல் தீர்வை முன் வைத்தாலும் இவர்களே அதற்கு சாமரை வீசுவார்கள். இது ஒரு காலத்தில் தமிழர்களை அழிக்க தமிழர்களை பாவித்தது போன்றதாகும். தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேச மக்கள் அரசியல் விழிப்படையாவிட்டால் அரசியல் ரீதியிலான முள்ளிவாய்க்காலை வெகு விரைவில் சந்திக்கும் நிலை ஏற்படும்.

மீண்டும் கூறுகின்றோம் தையிட்டி சட்டவிரோத கட்டடத்தால் பாதிக்கப்பட்டவர்களோடும் அதனால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களோடும் அவர்களின் பிரதிநிதிகளோடும் முறையான நேரடியான கலந்துரையாடல் நடாத்தி பொது தேர்வுக்கு ஆட்சியாளர்கள் வரவேண்டும். பலவந்தமாக தீர்வை திணிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது அவதானத்திற்கு அமைய மக்களின் காணிகளை ஆக்கிரமிக்க வேண்டும் என நோக்கிலேயே சட்டவிரோத விகாரை கட்டிட நில வரைபடம் வரையப்பட்டு அதன் சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தூபி பிக்கு தங்குமிடம் அவ்வாறே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதே நோக்கிலேயே போதி மரமும் நடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதியை விரும்பும் தமிழர்களும் அதே நிலையில் சிந்திக்கும் உண்மையான பௌத்தர்களும் “தையிட்டியில் விகாரைக்கு சொந்தமான காணியில் அதனை கட்டாதது ஏன்? சட்டத்தை பாதுகாப்பதாகக் கூறும் அரசும் இராணுவமும் அதற்கு தலைமை தாங்கும் ஜனாதிபதியும் சட்ட விரோத செயற்பாட்டுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது ஏன்?

தனியார் காணியில் விகாரை கட்ட தீர்மானம் எடுத்தது யார்? எங்கு? அதற்கு பதில் அளிக்கக்கூடிய அதிகார தரப்பினர் யார்? கட்டுமானம் விடயத்தில் சட்ட விரோத மற்றும் ஊழல் இடம்பெற்றுள்ளதா? என்பன தொடர்பில் பகிரங்க விசாரணை நடத்த படாதது ஏன்? எனும் கேள்விகளை கேட்கின்றனர்.

குறிப்பாக தற்போதைய ஆட்சியர்கள் கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் செய்த தவறுகள், அரசியல் ரீதியிலான குற்றங்கள், ஊழல்கள் என்பவற்றை எல்லாம் தேடித் தேடி விசாரணை செய்து விசாரணை ஆணைக்குழு அமைத்து நீதிமன்றில் நிறுத்துபவர்கள் ,முன்னாள் ஜனாதிபதி ரணிலையே நீதிமன்றில் நிறுத்துபவர்கள் தையிட்டி விகாரை விடயத்தில் அநீதியான தீர்வை முன் வைப்பது ஏன்? தமிழர்கள் என்றால், தமிழர்கள் நிலம் என்றால் எதையும் செய்யலாம் எனும் அரச பயங்கரவாத சிந்தனையைத் தவிர வேறொன்றும் இல்லை எனலாம்.

தமிழர் விரோத ஆக்கிரமிப்பு அடாவடி அரசியல் செய்பவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைகள் அதன் நியாயங்கள் தொடர்பில் கதைப் போரை பார்த்து அரசியல் செய்ய வேண்டாம் என சீறுவது எந்த வகையில் நியாயம். இவர்களின் கைக்கூலிகள் கடந்த 26 ஆம் திகதி நடந்த யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் தையிட்டி தொடர்பில் பேச வேண்டாம்.அரசியல் பேச வேண்டாம் என கூச்சலிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. இதுதான் எமது அரசியல் அவல நிலை இதனை வளர விடக்கூடாது.

மக்கள் விடுதலை முன்னணியாகிய தேசிய மக்கள் கட்சி தமிழருக்கு எதிரான இறுதி அரசியல் முறை முகமாகவும் நேரடியாகவும் கொடுத்துள்ளது.

இதற்கு 2009 போன்று சர்வதேச மட்ட ஆயிரக்கணக்கான சக்திகளும் ஆதரவு தெரிவிப்பது போன்று உள்ளது தமிழ் அரசியல் தலைமைகள் கருணா பிள்ளையான் அரசியலில் விழுந்து விடாது தமிழர் தாயகம் காக்க தேசியம் காக்க மக்கள் சக்தியை பலப்படுத்தும் அரசியல் செய்யுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.அதுவே எமது புது வருட அரசியல் இலக்காக அமைதல் வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *