டக்ளஸூக்கு வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகளும் எங்கே?; சி.ஐ.டி.யினர் விசாரணை; ஜனவரி 9 வரை விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு, இராணுவத்தால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, அவருக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை நேற்று ஞாயிறு பிற்பகல் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
2001ஆம் ஆண்டு இராணுவத்தால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, 2019ஆம் ஆண்டு கம்பஹா – வெலிவேரிய பகுதியில் பற்றை ஒன்றுக்குள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தத் துப்பாக்கி, டக்ளஸ் தேவானந்தாவுக்கு, இலங்கை இராணுவத்தினால் சட்டரீதியாக வழங்கப்பட்டது என ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, டக்ளஸ் தேவானந்தா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டமை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேர தடுப்பு உத்தரவு பெறப்பட்ட நிலையில் நேற்று(28) அவர் கம்பஹா நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொலையுண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘மாகந்துரே மதுஷ்’ சின் கூட்டாளி ஒருவர், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட மேற்படி துப்பாக்கி தொடர்பாக அளித்த தகவலில்,டக்ளஸ் தேவானந்தாவால் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறியருந்ததாக ‘சண்டே ரைம்ஸ்’தெரிவித்துள்ளது.
இந்த ஆயுதம் பல கொலைகளில் பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டதுடன் மேலும் விசாரணைகளில் அது இராணுவத்தால் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தேவானந்தாவுக்கு 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் 13 ரி – 56 ரக தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஆறு ரிவோல்வர்கள் வழங்கப்பட்டன.
மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்த துப்பாக்கியும் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்வதாக முன்னாள் அமைச்சர் எழுத்துபூர்வ உறுதிமொழி அளித்திருந்தார்.
துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், மதுஷ் ஒரு நீதிபதி முன் வாக்குமூலம் அளித்து, தேவானந்தாவிடமிருந்து ஒரு ஆயுதத்தைப் பெற்றதாகக் கூறியிருந்தார்.
எனினும் இந்த ஆயுதங்கள் காணாமல் போனமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளின் போது, இந்த ஆயுதங்களின் தற்போதைய நிலை குறித்து தனக்கு தெரியாது என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் ஆயுதங்களை வாங்கிய பல்வேறு நபர்கள் இப்போது பல்வேறு இடங்களில் உள்ளனர். சிலர் இடம்பெயர்ந்துவிட்டனர். என்று அவர் விசாரணைகளின் போது கூறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே டக்ளஸ் தேவானந்தாவை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க தீர்மானித்துள்ள சி.ஐ.டி.யினர் அந்த ஆயுதங்கள் தொடர்பிலும் அவற்றின் மூலம் குற்றங்கள் எதுவும் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதையடுத்து மதுஷுக்கு முன்னாள் அமைச்சர் ஆயுதத்தை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எந்த அடிப்படையில் கண்டறிவது என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.
குற்றப் புலனாய்வுத் துறை ஆரம்பத்தில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக 90 நாள் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கக் கோரியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்ததாகவும் சண்டே டைம்ஸ் செய்தித்தாளுக்குத் தெரியும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 72 மணி நேர தடுப்பு உத்தரவின் கீழ் தேவானந்தா தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் வெள்ளிக்கிழமை சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்டார், அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். 72 மணி நேர தடுப்பு உத்தரவு காலாவதியானதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
![]()