இலங்கை

கண்டி மாவட்ட செயலகத்து வெளிநாட்டிலிருந்தே மிரட்டல்?; சி.ஐ.டி.யினர் விரிவான விசாரணை 

கண்டி மாவட்டச் செயலக அலுவலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, குண்டுவெடிப்பு இடம்பெறவுள்ளதாக இரண்டு மின்னஞ்சல் செய்திகள் அனுப்பப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முதலாவது மின்னஞ்சல் செய்தி கடந்த 23ஆம் திகதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், மாவட்டச் செயலாளர் அது தொடர்பில் கடந்த 26ஆம் திகதி காலை நேரத்திலேயே அறிந்துள்ளார். இது குறித்து மாவட்டச் செயலாளர் இந்தித்த உடவத்த, மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்கவிடம் முறையிட்டதை அடுத்து, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு, பொலிஸ் மோப்ப நாய் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து அலுவலக வளாகத்தில் அதிரடி சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், குறித்த தகவல் போலியானது என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இருப்பினும், அலுவலகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்திற்குள், மீண்டும் ஒரு மின்னஞ்சல் செய்தி அஞ்சல் செய்யப்பட்டுள்ளது. அதில் மாலை 4 மணிக்கு முன்னர் குண்டுவெடிப்பு நிகழும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் மீண்டும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்புப் பிரிவினர் மீண்டும் சோதனைகளை ஆரம்பித்தனர். இதனால் அச்சமடைந்த அலுவலக ஊழியர்களில் பெரும்பான்மையானோர் அரை நாள் விடுமுறை பெற்று வெளியேறியதால், சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கிறிஸ்மஸ் விடுமுறைக்கும் வார இறுதி விடுமுறைக்கும் இடைப்பட்ட ஒரே வேலை நாளான 26ஆம் திகதி, சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக வந்த மக்கள், தமக்கு ஏற்பட்ட இந்த அசௌகரியம் குறித்து விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மின்னஞ்சல் செய்திகளை அனுப்பிய நபர் வெளிநாட்டில் இருந்து இதனை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *