இலங்கை

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அரசு; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு 

தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இட்டு, நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி கொண்டு செல்ல முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடக சுதந்திரம் மீதான அரசாங்கத்தின் அழுத்தம் குறித்து நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு ஜனநாயக நாட்டின் நான்கு முக்கிய தூண்களாக சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை மற்றும் ஊடகம் ஆகியவை விளங்குகின்றன. ஆனால், தற்போதைய அரசாங்கம் காவல்துறையை கருவியாகப் பயன்படுத்தி, மக்களின் ஜனநாயக உரிமைகளையும், பொலிஸில் பணிபுரியும் அதிகாரிகளின் உரிமைகளையும் மீறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் மக்களின் உரிமையைப் பறித்து, ஒரு ‘பொலிஸ் அரசை’ (Police State) உருவாக்க அரசாங்கம் முயல்கிறது.

“சுதந்திர ஊடகங்கள் தங்களின் கருத்துக்களை ஆதாரங்களுடன் முன்வைத்தாலும், அதைத் தடுத்து ஊடகங்களை ஒடுக்க காவல்துறையைப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என சஜித் பிரேமதாச சாடியுள்ளார்.

மக்களின் ஆணை சர்வாதிகாரத்திற்கானது அல்ல; மக்களின் அமைதியான பெரும்பான்மையினரின் குரலாக சுதந்திர ஊடகங்கள் விளங்குகின்றன.

அவற்றை ஒடுக்குவது என்பது சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் செயலாகும். மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வழங்கிய ஆணை, சர்வாதிகாரத்தை நிலைநாட்டவோ அல்லது ஒரு ‘காவல்துறை அரசை’ உருவாக்கவோ வழங்கப்பட்டது அல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் பொலிஸாரின் சுதந்திரமான செயல்பாடுகளில் தலையிடுவதால், அதிகாரிகளால் நடுநிலையாகப் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசியல் தலையீடுகள் இன்றி பணியாற்றும் உரிமை காவல்துறையினருக்கு மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உண்மைத் தகவல்களை வெளிப்படுத்தும் ஊடகங்களின் உரிமை பறிக்கப்படுவது 220 இலட்சம் மக்களின் உரிமையை மீறுவதற்குச் சமமாகும்.

தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் பாதீட்டு வாக்கெடுப்புகளிலும் அரசாங்கத்தின் சர்வாதிகாரத் தலையீடுகள் காணப்படுவதாகவும், குறிப்பாக நீர்கொழும்பு மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *