பொய்களால் ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது; கொழும்பு மாநகர சபை நல்ல உதாரணம்

பொய்களை கூறி ஆட்சியை கைப்பற்றினாலும் பொய்களால் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்பதனை கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை ஊடாக புரிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்ற வியாழக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மாநகர சபைக்கான மேயர் தெரிவின் போது பலவந்தமாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அன்று பகிரங்க வாக்கெடுப்பை கோரிய போதும் அதற்கு இடமளிக்காது செயலாளர் ஊடாக இரகசிய வாக்கெடுப்பையே நடத்தினர். அதன்போது வாக்குகளை பெற்றுக்கொள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு பொய் வாக்குறுதிகளை வழங்கியே அந்த சபையை அவர்கள் கைப்பற்றினர். ஆனால் தற்போது வரவு செலவுத் திட்டத்தில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்படும் போது பொய் வாக்குறுதிகளால் பெற்றுக்கொண்ட வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
இதன்மூலம் போய்களை கூறி ஆட்சியை பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் பொய்கள் மூலம் ஆட்சியை கொண்டு செல்ல முடியாது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை 6 மாதங்களில் நிறைவேற்ற முடியாமல் போனதால் இப்போது அந்த வாக்குகள் எதிராகிவிட்டன இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
ஜே.வி.பியினர் கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைகளில் பொய்களை கூறியே ஆட்சியை பெற்றுக்கொண்டுள்ளனர். இப்போது அது தெளிவாகின்றது. இந்நிலையில் தாம் தோல்வியடைவோம் என்பதனால் வாக்கெடுப்புகளை நடத்தாமல் இருப்பதற்கும் முயற்சிக்கின்றது. தமக்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்றால் மற்றையவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். இவர்கள் புதிய முறைமை மாற்றத்திற்காகவே வந்தனர். ஆனால் இவர்கள் ஒருபோதும் இல்லாத முறைமைகளிலேயே போகின்றனர் என்றார்.
![]()