லிபிய இராணுவ தளபதி உட்பட 07 பேர் விமான விபத்தில் பலி

துருக்கியின் தலைநகரான அங்காராவிலிருந்து புறப்பட்ட பின்னர் இடம்பெற்ற விமான விபத்தில் லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி அகமது அல் ஹதாத் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
அவருடன் தனியார் ஜெட் விமானத்தில் பயணித்த நான்கு இராணுவ உயரதிகாரிகள், மூன்று பணியாளர்கள் என அனைவரும் உயிரிழந்துள்ளதாக லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறே இவ்விபத்துக்கு காரணம் எனவும் லிபிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் தொடர்பை இழந்ததோடு அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது என துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா கூறியுள்ளார்.
இது தொடர்பில் துருக்கிய அதிகாரிகள் மேலும் குறிப்பிடுகையில், அங்காராவிலிருந்து தெற்கே சுமார் 70 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஹேமானாவில் உள்ள கெசிக்காவக் கிராமத்திற்கு அருகில் பல்கன் 50 வகை வணிக ஜெட் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
லிபியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கிலான உயர்மட்ட பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளுக்காக லிபிய பிரதிநிதிகள் அங்காராவுக்கு விஜயம் செய்திருந்தனர் என்றுள்ளனர்.
ஜெனரல் முஹம்மது அலி அகமது அல்-ஹதாத் மற்றும் நான்கு அதிகாரிகளின் மரணத்தை உறுதிப்படுத்திய லிபிய பிரதமர் அப்துல்-ஹமீத் திபீபா, எமது பிரதிநிதிகள் குழு வீடு திரும்பும் போது இந்த துயரமான விபத்து நிகழ்ந்துள்ளதாக பேஸ்புக்கில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார். இவர்கள் லிபியாவிற்கு பெரும் இழப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கு லிபியாவின் உயர் இராணுவத் தளபதியாக இருந்த அல்-ஹதாத் பிளவுபட்டுள்ள லிபியாவின் இராணுவத்தை ஒன்றிணைக்க ஐ.நா.வின் மத்தியஸ்தத்துடன் நடந்து வரும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்து வந்தவராவார்.உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, தலைநகர் திரிப்போலியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதை எதிர்க்கும் போட்டி அரசு, நாட்டின் கிழக்குப் பகுதியை மையமாகக் கொண்டு செயல்படுவது தெரிந்ததே.
![]()