தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண முடியாது!; தமிழ் தேசியக் கட்சிகளிடம் அமைச்சர் ஜெய்சங்கரும் தெரிவிப்பு

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குள் காண முடியாது என்பதை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் நாம் வலியுறுத்திய நிலையில் அமைச்சர் ஜெய்சங்கரும் அதனையே தெரிவித்தார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் காலநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது. சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தலை வைப்பதை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பதை தெரிவித்தோம். அது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் நடந்தது. அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசப்பட்டது. மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் கஜேந்திரகுமாரும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அரசியல் தீர்வு தொடர்பாக ஒற்றையாட்சிக்குள் செய்ய முடியாது என அமைச்சர் தெரிவித்தார். அதை நாங்களும் தெரிவித்தோம். சமஷ்டிக் கட்டமைப்பில் இருக்க வேண்டும் அதற்கு என்ன பெயர் கொடுக்கப்பட்டாலும் அந்த கட்டமைப்பு சமஸ்டியாக இருக்க வேண்டும் என சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.
அதற்கெல்லாம் முதல் மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
டித்வா பேரிடருக்கு பின்னர் இந்தியாவின் உதவிகள் எவ்வாறு வந்து சேருகின்றன? வடக்கு கிழக்கில் எவ்வாறு உள்ளது என்ற விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.
பிரஜாசக்தி என்ற ஒன்றை உருவாக்கி தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை புறந்தள்ளி அரசாங்கம் நடந்து கொள்கின்ற விடயத்தை சுட்டிக்காட்டினோம்.
இந்திய உதவி திட்டங்களுக்காகவாவது ஜனநாயக முறை ஊடாக தெரிவு செய்யப்பட்டவர்களை இணைத்துக் கொண்டு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
கால்நடைகள் மூவாயிரத்துக்கு மேல் மன்னாரில் உயிரிழந்துள்ளது. திருகோணமலை மாவட்டத்திலும் நடந்துள்ளது. அதற்கு உதவி செய்யக் கோரியிருந்தோம்
புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சர் விசாரித்தார். யாழ்ப்பாணம், தலைமன்னார் புகையிரதப் பாதைகளை திருத்தி அமைப்பதற்கான விடயங்களை கேட்டு அறிந்தார்.
பலாலி, காங்கேசன்துறை தொடர்பாகவும் கலந்துரையாடினோம். பலாலிக்கு கூடுதலான விமானங்கள் வந்தால் தான் பொருளாதார ரீதியாக செயல்படக் கூடியதாக இருக்கும் என்பதை சுட்டி காட்டினோம்.
ஓடுபாதையை விரிவாக்கினால் பெரிய விமானங்கள் வரும் என்பதையும் முனைய கட்டிடங்களை விரிவாக்குவது தொடர்பாக பணம் செலவிடப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். திரும்ப அதனை பார்ப்பதாக தெரிவித்தார்.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் விசேடமாக எதையும் சொல்லவில்லை. நிறைய கேள்விகளை எங்களிடம் கேட்டார். மாகாண சபை தேர்தல் என்ன முறையில் நடைபெறும் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அரசாங்கம் ஏதாவது சொன்னதா எனக் கேட்டார்.
ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடம் அடுத்த வருடம் என தேர்தலை பின் போடுகிறதா அரசாங்கம் என கேட்டார். அதனை தெரிவித்திருந்தோம். எமது கருத்துக்களை தான் அமைச்சர் கேட்டார். பதில் கருத்துக்களை வெளியிடவில்லை.
மாகாண சபை தேர்தலை உடனடியாக வைப்பது தொடர்பாக மகஜரொன்றையும் கையளித்தோம் – என்றார்.
![]()