இலங்கை

13 ஐ அமுல்படுத்துமாறு 38 வருடமாக இந்தியா தொடர்ந்தும் கேட்கும் நிலை; ஒற்றையாட்சியே இதற்குக் காரணம்; ஜெய்சங்கருக்கு சுட்டிக் காட்டிய கஜேந்திரகுமார்

தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற சமஷ்டி கோரிக்கையை தனிமைப்படுத்துகின்ற நோக்கத்தோடு மற்றைய தரப்புகள் இந்திய வெளியுறவு துறை அமைச்சருடனான சந்திப்பில் செயல்பட்டது என்பதை தான் சொல்ல வேண்டி இருக்கிறது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் காலநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது. சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நாட்டில் ஏனைய மக்களுடைய அபிலாசைகளோடு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளேன்.

அந்த அபிலாஷைகள் நடைமுறைப்படுத்துகிறது என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் 13-ஆம் திருத்தத்தை ஒற்றையாட்சி முறைக்குள் கொண்டு வந்து மட்டுப்படுத்துகின்றது.

அந்த ஒற்றையாட்சி கட்டமைப்பு சம்பந்தமாக இலங்கை உயர் நீதிமன்றம் மிகத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றது. அதிகாரங்கள் மத்தியில் மட்டும் தான் இருக்கலாமேயொழிய மாகாணங்களுக்கோ எந்த ஒரு கட்டமைப்புக்கோ அதிகாரங்கள் வழங்கப்பட முடியாது. அந்த வகையில் மிக இறுக்கமான ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளே,இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தமிழ் தேச அங்கீகாரம், இறைமை, சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க கூடிய குறிப்பாக திம்பு கோட்பாட்டை நடைமுறைப்படுத்த கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் ஒற்றையாட்சிக்குள் முடக்கியதால் தமிழ் மக்கள் அந்த 13-ம் திருத்தம் நடைபெற்று 38 வருடத்திற்கு பிறகும் எதையும் அனுபவிக்க முடியாத நிலை இருப்பதாய் சுட்டிக்காட்டினேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அரசியல் அபிலாஷைகளை தமிழ் மக்கள் அடைவதாக இருந்தால் அதிலே அடிப்படை மாற்றம் ஒன்று நடந்தே ஆக வேண்டும். இலங்கை சமஸ்டி கட்டமைப்பாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் 38 வருடமாக இந்தியா இந்த 13ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல்,அதனை நடைமுறைப்படுத்த சொன்ன நாளில் இருந்து கேட்பது போல, எதிர்காலத்திலும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமே ஒழிய அதற்கு அங்கால் எதுவும் நடக்கப் போவதில்லை என்ற விடயத்தை தெளிவாக வலியுறுத்தினேன்.

துரதிஷ்டவசமாக அந்த விடயத்தை நான் மட்டுமே வலியுறுத்தினேன். சந்திப்பிலேயே கலந்துகொண்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்களும் மாகாண சபை தேர்தல்களை வைக்க வேண்டும் என்றும், மாகாண சபை முறைமையில் 13 ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப கேட்டதேயொழிய தங்களுக்கு மக்கள் ஆணை வழங்கிய கோட்பாடான ஒற்றையாட்சி நிராகரிப்பு, சமஷ்டி ஆட்சி முறையை வலியுறுத்தவில்லை.

எழுத்து மூலமாக தமிழ் அரசுக் கட்சி தலைவர் சி.வீ.கே.சிவஞானம் ஒரு ஆவணத்தை இந்திய தூதுவருக்கு சந்தோஷ் ஜாவுக்கு வழங்கியிருந்தார். ஜெய்சங்கருக்கு வழங்கவில்லை. அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று எனக்கு தெரியாது. அது தெரிய வருமோ தெரியாது.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களைப் பார்த்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக தமிழ் தேசிய பேரவையாக எங்கள் குரல் தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற சமஷ்டிக் கோரிக்கையை தனிமைப்படுத்துகின்ற நோக்கத்தோடு மற்றைய தரப்புகள் செயல்பட்டன என்பதை தான் சொல்ல வேண்டி இருக்கிறது. அது இனத்தினுடைய துரதிஷ்டம்.

ஒற்றையாட்சியை நிராகரித்து ஒற்றை ஆட்சிக்குள் எந்த ஒரு கட்டமைப்பும் சரி வராது எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்று நம்பி தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வழங்கப்பட்ட ஆணையை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் முக்கியமான சந்திப்பு நடக்கும் போதும் நடந்து கொள்வது தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் அபிலாஷைகளை ஏதோ ஒரு வகையில் அடைவதற்கும் ஒற்றையாட்சியை நிராகரித்து தாண்டி போக தொடர்ந்தும் தடையாக இருப்பது தான் இன்றைய யதார்த்தம் என்றார்.

மேலும் குறித்த சந்திப்பில்

மீனவர் பிரச்சினை வலியுறுத்தினோம். கடந்த வாரம் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அந்தப் போராட்டத்தில் அரசு தரப்பில் ஒரு சிலர் அதை திசை திருப்பி இந்திய துணை தூதரகம் யாழ்ப்பாணத்தில் இருப்பதை அகற்ற வேண்டும் என்றும் சீனா தூதரகமும் அமெரிக்கா தூதரகமும் அங்கு வரவேண்டும் என்றும் இந்தியா தான் மீனவர்களை அழித்துக் கொண்டிருக்கின்றது என்ற கருத்துக்களையும் வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டினேன்.

இந்திய மீனவர்கள் வடகிழக்கில் கடற் பரப்பிற்க்குள்ளே வந்து அத்துமீறிய செயற்பாடுகளால் எங்களுடைய மீனவர்களுடைய வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது என்ற விடயம் ஒரு போரால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு பல மடங்குக்கு சுமையை ஏற்படுத்தக்கூடிய விடயம்.

இந்த தமிழ் கட்சிகள் இந்த விடயத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட தயாரில்லை என்ற விடயத்தை காட்டி ஒட்டுமொத்தமாக அந்த மக்களை ஒரு பக்கம் இருக்க கூடிய தமிழ் கட்சிகளுக்கு எதிராக திருப்புவதுடன் மேலதிகமாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எதிராக திருப்பும் அளவில் தான் இந்த அரசாங்கத்துடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டினோம். இந்திய மத்திய அரசு இதில் தலையிட்டு இதை தீர்த்துவைத்தாக வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தினோம்.

அதேபோன்று யாழ்ப்பாணத்திலே இருக்கக்கூடிய பலாலி விமான நிலையத்தில் முதல் கட்டம் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது இரண்டாவது கட்டத்தில் ஓடு பாதையை முழுமையாக சீர்திருத்த வேண்டும்.

பலாலியில் ஓடுபாதை 2300 மீற்றர் நீளமாக இருக்கிறது. 950 மீற்றர் மட்டும் தான் சீர்திருத்தப்பட்டிருக்கிறது. ஏனைய 1350 மீட்டர் திருத்தப்படாமல் இருக்கிறது. அதை இந்தியா செய்தாலே கணிசமான முன்னேற்றத்தை பலாலியில் ஏற்படுத்தும். சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், துபாய் போன்ற நாடுகளில் இருந்து விமானங்கள் வந்திறங்க கூடிய நிலைமையை ஏற்படுத்தும். ஏயார் பஸ் 320 ,ஏயார் பஸ் 321 விமானங்கள் வந்திறங்கக்கூடிய நிலைமைகளை உருவாக்கும். அவ்வகையில் நியாயமான அளவுக்கு வருமானத்தை வடக்கிற்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற விடயத்தை சுட்டிக் காட்டினோம். அது சம்பந்தமாக இந்திய ஆழமாக தங்கள் படித்து முடிவெடுப்பார்கள் என்று அவர் கூறியிருந்தார் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *