இலங்கை

இது ஓரு பௌத்த நாடு என்பதை தெரிந்து கொள்ளுங்கள் பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு!

இது பௌத்த நாடு இதனை திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இவ்வாறு பௌத்த விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும், பௌத்தர்கள் பொறுமையாக இருப்பதற்கு பௌத்த சாசனம் கற்றுத்தந்த பொறுமையே காரணம் எனவும், ஆனால் இந்த பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது பௌத்த நாடு என்பதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறீதரன் போன்றோர் உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். திஸ்ஸ விகாரையில் எமது பக்தர்களுக்கு வழிபாட்டில் ஈடுபடவோ, போதி பூஜைகளை நடத்துவதற்கோ இடமளிக்காது ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். அவ்வாறு ஆர்ப்பாட்டங்களை நடத்திவிட்டு அவர்கள் கொழும்புக்கு வந்து கோயில்களுக்கு வருமளவுக்கு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளமையானது இது பௌத்த நாடு என்பதனாலேயே ஆகும். இது வேறு மதமாக இருந்திருந்தால்,ஏனைய மதத்திற்கு இவ்வாறு செய்துவிட்டு அவர்களால் இந்த நாட்டில் இருந்திருக்க முடியாது. பௌத்தர்களின் பௌத்த சாசனத்தை கற்றமையின் ஊடாக உருவாகியுள்ள பொறுமையினாலேயே இவர்கள் இருக்கின்றனர்.ஆனால் இந்த பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதனை இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு மேற்பார்வை குழுவில் திஸ்ஸ விகாரை தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை எடுத்தோம். சகல தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தோம். 1954 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான அதிகாரி திஸ்ஸ விகாரை தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 1959 ஆம் ஆண்டில் முதலாவது இலங்கை வரை படத்திலும் அது உள்ளது. 1971ஆம் ஆண்டில் யாழ். நகர வரைபடத்திலும் உள்ளது. 20ஏக்கர் காணி இருந்தது. இப்போது 14 ஏக்கராக அது குறைவடைந்துள்ளது. அங்கு சட்டவிரோதமாக எவரும் வசித்திருந்தால் அவர்களுக்காக காணிகளை விடுவிப்பதற்காக தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

எவ்வாறாயினும் அரசியலமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்பு மீறப்படுவது போன்றே உள்ளது. தேவநம்பிய திஸ்ஸ சாசனத்திற்காக வழங்கிய காணியை ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு குறைக்கவே நீக்கவோ முடியாது. ஆனால் 98 வீதம் வரையில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு திஸ்ஸ விகாரைக்கு செய்வது தவறானது.

பௌத்தர்கள் ஒருபோதும் கோயில்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியதில்லை. இவ்வாறான நிலைமையில் கொழும்பில் உள்ள இந்து அல்லது தமிழ் மக்களும் இதற்கு எதிராக இருக்க வேண்டும் என்று கோருகின்றோம்.

இதேவேளை தமிழ் நிலத்தில் விகாரைகளை அமைக்க முடியாது என்று யாழ். பல்கலைக்கழத்திலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். அப்படியென்றால் எமது அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இதனை ஏற்றுக்கொள்கின்றதா? அவர்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்கின்றோம்.

அதேபோன்று வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்லியலை அழிப்பது பாரிய குற்றமாகும். இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இவ்வாறான நிலைமையில் திஸ்ஸ விகாரையில் இவ்வாறு அழுத்தங்கள் மூலம் விகாரையை அகற்ற முயன்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *