இலங்கை

தையிட்டிக்கு மற்றொரு புத்தர் சிலை வருகிறது!;  தடுக்க 3ஆம் திகதி அணி திரளுங்கள் – சிறீதரன் 

மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தால் என்ன அனுர குமார திஸாநாயக்கவாக இருந்தால் என்ன அனைவரும் ஒருவிதமான காரியங்களையே கை கொள்கிறார்கள் என்பது தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கைதுகளில் இருந்து தெரிகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

எதிர்வரும் மூன்றாம் திகதி தையிட்டி விகாரையில் அதனை விஸ்தரிப்பதற்கும் புத்தர் சிலை வைக்கப்படுவதை தடுப்பதற்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே சிவஞானம் சிறீதரன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி பகுதியில் பொலிஸார் நடந்த விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

எதிர்வரும் மூன்றாம் திகதி விகாரையை அகலப்படுத்தவும் மற்றொரு புத்தர் சிலையை வைப்பதற்கும் முயற்சிப்பதாக செய்திகள் எங்களுக்கு கிடைக்கின்றன.

இதற்கு எதிராக மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த மக்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அதிலே பொதுமக்கள் பிரம்மாண்டமான அளவில் பங்கு கொள்ள வேண்டும். தையிட்டி போராட்டத்திற்கு வந்தவர்களை விட ஆயிரக்கணக்கிலே மக்கள் வந்து இதற்காக எதிர்ப்பை தெரிவிக்கும் போது தான் அரசாங்கத்திற்கான செய்தியை வெளிப்படுத்த முடியும். அரசின் உண்மை முகத்தை வெளிப்படுத்த முடியும்.

ஜனநாயக அரசு என்று சொல்லி தங்களை இடதுசாரித்துவ கொள்கை என்று சொல்லி முலாம் பூசி தமிழ் மக்களையும் புலம்பெயர் நாடுகளையும் அங்குள்ள மக்களையும் ஏமாற்றிக் கொண்டு செல்கின்ற அரசுக்கு இன்றைய செய்திகள், நிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு அவர்கள் ஏதோ செய்வார்கள் நல்லது நடக்கும் என்று பேசுகின்றவர்களுக்கும் இந்த அராஜகம் பயங்கரவாதமும் பொலிஸாரின் நடவடிக்கையும் தெளிவாக புரிந்து கொள்ள வைக்கும் என்று நினைக்கிறேன்.

மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தால் என்ன அனுரகுமார திஸாநாயக்கவாக இருந்தால் என்ன அனைவரும் ஒருவிதமான காரியங்களையே கைக் கொள்கின்றனர் என்பதே தெரிகிறது. தொடர்ந்தும் இந்த போராட்டங்களை மக்களாக இணைந்து முன்னெடுப்போம் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *