இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்த மக்கள் கருத்துக்களுக்கு அழைப்பு

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கி, அதற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் மக்களின் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான 11 பேர் கொண்ட நிபுணர் குழுவினால் இந்தப் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இச்சட்டமூலம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ இந்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் திருத்தங்களையும் உள்வாங்குவதே இதன் நோக்கம்

“எமது அரசாங்கம் பதவிக்கு வந்தபோது வழங்கிய பிரதான வாக்குறுதிகளில் ஒன்று, பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் மக்களின் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் புதியதொரு சட்டத்தை உருவாக்குவதாகும்.

அதற்கமைய, சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான 11 நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலம் பழைய சட்டத்தை நீக்கி, புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது அந்தச் சட்டமூலம் மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று சட்டமூலங்களும் இப்போது நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இது மிகவும் நுணுக்கமான மற்றும் உணர்வுபூர்வமான, நாட்டுக்கு மிக முக்கியமான ஒரு சட்டமாகும். எனவே, இதனை நேரடியாக அமைச்சரவைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ சமர்ப்பிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் இது குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்களின் கருத்துக்களைப் பெற வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும், இதில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமாயின் அவை குறித்த யோசனைகளை முன்வைக்கவும் இந்தக் காலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆர்வமுள்ள சிவில் அமைப்புகள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தனிநபர்கள் இந்தச் சட்டமூலத்தை அவதானித்து, அரசாங்கத்திற்குத் தமது மேலான கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே சில தரப்பினர் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர், அவற்றை நாங்கள் வரவேற்கிறோம்.

பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பிறகு, ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழு அந்த அனைத்து யோசனைகளையும் பரிசீலித்து தேவையான மாற்றங்களைச் செய்யும். எனவே, இது ஒரு இறுதியான சட்டமூலம் அல்ல; மக்களின் கருத்துக்களுக்காகத் திறந்திருக்கும் ஒரு வரைபு மட்டுமே. இதனைப் பயன்படுத்தி உங்கள் கருத்துக்களை நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *