இலங்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் நலனில் காட்டவில்லை – அரசை விமர்சிக்கும் நாமல்

அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகவும், அரச நிறுவனங்களுக்காகவும் மிகக்குறுகிய காலத்தில் பெருமளவிலான கெப் ரக வண்டிகளை இறக்குமதி செய்ய எடுக்கும் முயற்சிகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பே, வெறும் 12 நாட்களுக்குள் 1,700-க்கும் மேற்பட்ட கெப் ரக வண்டிகளை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதில் காட்டும் அதே வேகத்தையும் ஆர்வத்தையும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலோ அல்லது அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலோ அரசாங்கம் காட்டவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதி ஒரு நாளைக்கு ஒரு கருத்தையும் மறுநாளில் வேறொரு கருத்தையும் கூறி வருவதாகவும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து தெளிவான நிலைப்பாடு அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.

திறைசேரியில் நிதி இல்லை எனக் கூறிக்கொண்டு மக்களின் சலுகைகளை குறைக்கும் அரசாங்கம், தமக்குத் தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய மட்டும் நிதி ஒதுக்குவது முறையற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

கெப் ரக வண்டிகளை இறக்குமதி செய்ய எடுக்கும் முயற்சியை, கிராமப்புற மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *