2027ஆம் ஆண்டளவில் அதிக ஆபத்து மிக்க வலயத்தில் எவரும் வாழ முடியாது; 17,648 குடும்பங்களுக்கு 50 இலட்சம் ரூபா கொடுப்பனவு அபாய வலயங்களில் உள்ளவர்களை வெளியேற்ற விரைவில்

2027ஆம் ஆண்டளவில் அதிக ஆபத்து மிக்க வலயத்தில் எந்தவொரு குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும், அதற்கு முன்னர் அபாய வலயங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை டித்வா புயலால் வீடுகளை இழந்த மற்றும் வீடுகளில் மீள குடியேற்ற முடியாத 17,648 குடும்பங்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் கூடிய விரைவில் பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியேற்றப்படுவார்கள் என்றும், அவர்களுக்காக 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையில் குறைநிரப்பு பிரேரணை அவசியம் என்பதனை பாராளுமன்றத்தில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் இந்த 500 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மூலம் ஏப்ரல் மாதமளவில் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்று சிலர் கூறினர். ஆனால் நாங்கள் மிகவும் முறையாக நிதி முகாமைத்துவம் மற்றும் இலக்குகளுடன் செயற்படும் அரசாங்கமாகும். நாங்கள் பொருளாதார விடயத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் சிறப்பாக பேணி வந்துள்ளோம். கடந்த காலங்களில் திறைசேரி மறையாகவே இருந்தது. ஆனால் நாங்கள் 1202 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ளோம்.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை பொருளாதாரத்திற்கும் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பொரும் தாக்கமாகும். நாங்கள் வீழ்ந்திருந்த நாட்டை கட்டம் கட்டமாக முன்னால் கொண்டுவந்திருந்த நிலையிலேயே இந்த அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எங்களிடம் 1.2 ரில்லியன் ரூபா இருப்பை மக்களுக்காக பயன்படுத்த வேண்டியுள்ளது.
அனர்த்த நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீடுகளுக்கு திரும்பும் வகையில் வீடுகளை சுத்தம் செய்ய 25,000 ரூபா வழங்கப்படுகின்றது. இதில் குறைபாடுகள் இருக்கலாம். இதற்காக அரச பொறிமுறை உள்ளது. அரச அதிகாரிகள் அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பர். அதனை அரசியல்வாதிகள் செய்வதில்லை. கிராம சேவர்களுக்கு இதில் பெரும் பங்கு உள்ளது. அவர்கள் வழங்கப்பட வேண்டியவர்களை தெரிவு செய்யும் போது அதற்காக சிறிது காலம் எடுக்கும்.
பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 50,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதில் இன்னும் சில முறைமைகள் உள்ளன. அத்துடன் வாழ்வாதரம் இழந்தவர்களுக்கும் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
6228 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 4543 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அந்த வீடுகளுக்கு போக முடியாது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் வீடுகள் சேதமடையவில்லை. ஆனால் வீடுகள் ஆபத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ள வீடுகளும் உள்ளன. இவ்வாறாக மொத்தமாக 17,648 வீடுகளுக்கு மக்கள் திரும்ப முடியாது. முதற்கட்டமாக அந்த வீடுகளுக்கு மூன்று மாதங்களுக்கு 50,000 ரூபா கொடுப்பனவை வழங்குவோம். ஜனவரி மாதம் முதல் அதனை வழங்குவோம். அதேபோன்று முகாம்களில் இருக்கும் மக்கள் படும் கஸ்டங்களை அறிவோம். அவர்களுக்கு வாடகை வீடுகளுக்கு செல்வதற்காக மாதாந்தம் 25,000 ரூபாவை வழங்குவோம்.
இதேவேளை பாதிக்கப்பட்ட விவசாயத் துறை தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். இதன்படி நெல், சோளம், பயறு போன்ற தானியங்கள் பயிரிடுபவர்களுக்கு ஹெக்டேயருக்கு 150,000 ரூபா கொடுப்பனவை வழங்குவோம். அத்துடன் ஏனைய பயிர் செய்கைகளுக்கு தேவையான நஸ்ட ஈட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அதேபோன்று கால்நடை பண்ணையாளர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம். பசு, ஆடு. பன்றி, கோழி உள்ளிட்ட பண்ணையாளர்களுக்கு அதனை வழங்குவோம். அத்துடன் மீனவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும்,அவர்களின் படகுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குவோம். ஜனபதி நிதியத்தில் இருந்து 10,000 ரூபாவும் திறைசேரியில் இருந்து 15,000 ரூபாவும் வழங்கவுள்ளோம். எப்படி அந்த மாணவர்களை அடையாளம் காண்பது. இதனை கிராம சேவகர் ஊடாக அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 6,20,000 குடும்பங்கள் உள்ளன. அவற்றில் மாணவர்கள் தொடர்பில் தகவல்களை பெற்று அந்த கொடுப்பனவு வழங்கப்படும். புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்க முன்னர் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே கொடுக்கப்படும் எந்த கொடுப்பனவும் நிறுத்தப்படாது.
அத்துடன் கைத்தொழில் மற்றும் வர்தக நிலையங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள 9600 பேருக்கு இதற்காக 200,000 ரூபா வீதம் வழங்கப்படும். கட்டிடங்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆரம்பமாக 5 இலட்சம் ரூபா ஆரம்பமாக வழங்கப்படும் பின்னர் மதிப்பீடுகள் இன்றி அது வழங்கப்படும். எவருக்காவது அதனை முதற்கட்டமாக பெறுவதென்றால் பெற்றுக்கொள்ள முடியும். பின்னர் மதிப்பீடு செய்த பின்னர் 50 இலட்சம் ரூபா வரையில் வழங்கப்படும். அதேபோன்று பெரும்கைத்தொழில் துறைக்கு சலுகைக் கடன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி ஊடாகவே இது வழங்கப்படும். 25 மில்லியன் ரூபா வரையில் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
.இதேவேளை முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும் என்று கூறினேன். அரசாங்கம் காணியை வழங்கும், வழங்க முடியாவிட்டால் 50 இலட்சம் ரூபா வரையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தேன். ஆனால் முழுமையாக வீடுகளுக்கு மாத்திரமன்றி மக்கள் வசிக்க முடியாது என்று அபாய எச்சரிக்கை உள்ள வீடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் எச்சரிக்கை வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் அபாய வலயத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களில் மீள் குடியேற்றுவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். இதன்படி 17,648 குடும்பங்களுக்கும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
அபாய வலயத்தில் வசிக்கும் ஏனைய மக்களையும் அங்கிருந்து வெளியேற்றுவோம். முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2000 வீடுகளுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களுக்கு 25 இலட்சம் ரூபா வழங்கப்படும். அந்த தொகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வாறாயினும் 2027ஆம் ஆண்டளவில் அதிக ஆபத்து வலயத்தில் எந்தவொரு குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டத்தை தயாரிப்போம். அவர்களை வெளியில் கொண்டு வருவதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்வோம். என்றார்.
![]()