தையிட்டி விகாராதிபதிக்கு உயர் அதிகாரம் வழங்கல்; எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிறன்று போராட்டம்

பௌத்த கட்டமைப்பின் உயரிய அதிகாரமான வட இலங்கை துணைத் தலைமை சங்கநாயக்க பதவி வழங்கும் நிகழ்வு அரசு மற்றும் எதிர்க் கட்சியின் ஒருங்கிணைப்பில் புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் எதிர்வரும்- 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந் நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினரின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள், பொது அமைப்புக்க்களின் ஆதரவுடன் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
நேற்று வியாழக்கிழமை காலை வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்ற போதே எதிர்ப்புப் போராட்டம் நடாத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர் கலாநிதி.ஹினிதும சுனில் செனெவி, பாதிக்கப்பட்ட மக்களுடனான சந்திப்பில் மக்களுடைய காணி மீள வழங்கப்படுமெனவும், இவ் விகாரையானது குறித்த அமைச்சில் பதிவு செய்யப்படாதது எனவும், தீர்வு வழங்கச் சில சக்திகளே தடையாகவிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்த நிலையில் அவரே தலைமை தாங்கி இத் தேரரைப் பதவி உயர்வு வழங்கிக் கெளரவிப்பதானது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
எனவே இவ் விடயத்துக்கு எமது சபையின் சார்பில் எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும், நிறைவேற்றப்படும் தீர்மானமானது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் எதிர்ப்புக் கடிதமானக அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் 4 ஆம் வட்டார உறுப்பினர் பத்மநாதன் சாருஜன் நேற்றைய சபை அமர்வில் கேட்டுக் கொண்டார். அவர் கொண்டு வந்த தீர்மானம் சபை உறுப்பினர்கள் அனைவரதும் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
![]()