இலங்கை

எதிர்வரும் 20 இல் “பருவநிலை மாற்றமும் வெள்ளப்பெருக்கும்” கருத்தமர்வு நிகழ்வு !

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் ஏற்பாட்டில் “பேரிடரை எதிர்கொள்ளல் : நல்லூரில் வெள்ளம்” என்ற தொனிப் பொருளில் அமைந்த கருத்தமர்வு ஒன்று எதிர்வரும் 20 ஆம் திகதி, சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் தலைவர் மைதிலி ரவீஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தமர்வில் “பருவநிலை மாற்றமும் வெள்ளப்பெருக்கும்” என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கருப்பொருளுரை ஆற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில் “மௌனம் கலைதல்” என்ற செயல்விளக்க அரங்கு, குழு நிலைக் கருத்தமர்வு ஆகிய நிகழ்வுகளும், பொதுமக்கள் பங்கேற்கக் கூடியவகையில் கருத்தறியும் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.

பேரிடரை எதிர்கொள்ளல் என்ற குழுநிலைக் கருத்தமர்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணபதி கஜபதி, புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான ஏ.அன்ரனிராஜன், பிரதீபா விபுலன், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வடக்குக்கான உதவிப் பொது முகாமையாளர் ஏந்திரி. ஏகாம்பரநாதன் ஜெகதீசன், யாழ். மாநகர சபையின் தலைமைப் பொறியியலாளர் ஏந்திரி இராசையா சுரேஸ்குமார், நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஏந்திரி. குணராஜ் சுஜீவன் மற்றும் நல்லூர் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் இராமலிங்கம் சிவகரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *