இலங்கை

அனர்த்தத்தில் உயிரிழப்புகளைக் குறைத்திருக்கலாம்; அதிகாரிகளை அச்சுறுத்தி உண்மையை மறைக்க சதி

டித்வா சூறாவளியின் போதான அனர்த்த நிலைமைகளின் போது சொத்து இழப்புகளை தவிர்க்க முடியாது என்றாலும் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் முன்கூட்டிய அறிவித்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்தாது செயற்பட்டுள்ளது என்றும், தற்போது இது தொடர்பில் கேள்விகள் எழும் போது அது தொடர்பில் கருத்துக்களை கூற முடியாத வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளை அச்சுறுத்தி அவர்களின் வாய்களை மூடி உண்மைகளை மூடி மறைப்தற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, அஜித் பி பெரேரா மற்றும் முஜிபூர் ரஹுமான் உள்ளிட்ட குழுவினர் நேற்று புதன்கிழமை, வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு சென்று டித்வா சூறாவளி தொடர்பான முன்னறிவித்தல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட முன்னறிவித்தல்கள் தொடர்பிலான தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கோரிக்கையை விடுத்த பின்னர், அவர்கள் ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கையிலேயே இவ்வாறு அரசாங்கத்தின் மீத குற்றம் சுமத்தி கூறினர்.

இது தொடர்பில் நளின் பண்டார எம்.பி ஊடகங்களுக்கு மேலும் கூறுகையில்,

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வளிமண்டளவியவியல் திணைக்களத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட அறிவிக்கப்பட வேண்டிய அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதா என்ற தகவல்களை பெற்றுக்கொள்ள வந்துள்ளோம்.

குறிப்பாக அரசாங்கம் இந்த நிறுவனங்களின் அதிகாரிகளை அச்சுறுத்தி அவர்களின் வாய்களை மூடி அவர்கள் கருத்து வெளியிடுவதை தடுத்திருப்பதாக தெரிகின்றது. இதனால் எதிர்க்கட்சியென்ற வகையில் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை கோரியுள்ளோம்.

மழை பெய்யுமாக இருந்தால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நீர்பானச திணைக்களம், மகாவலி அதிகாரசபை என்பன முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளன. அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதா? அவ்வாறு நடந்திருந்தால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தியிருக்க முடியும். சொத்து சேதங்கள் ஏற்பட்டாலும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும்.

நீர்த் தேக்கங்களை முன்கூட்டியே முகாமைத்துவம் செய்திருக்க வேண்டும். இது எதனையும் செய்யாமல் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அல்லாமல் வேறு தரப்பினர் மீது சுமத்தி உண்மையான அழிவுகள் மற்றும் உயிரிழப்புகளை மூடி மறைத்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

கடந்த காலங்களில் வளிமண்டலவியல் திணைக்களப் பகுதியில் கருத்துக்களை வெளியிடுவதற்கு தடைகள் போடப்பட்டுள்ளன. அத்துடன் மற்றைய நிறுவனங்களிலும் அரச அதிகாரிகளுக்கு கருத்து தெரிவிக்க தடைகள் போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை அமைச்சரவை பேச்சாளர் இந்த விடயத்தில் இது புலனாய்வு தகவல் அல்ல என்று கூறுகின்றார். அது எங்களுக்கும் தெரியும். வானிலை எதிர்வுகூறலே. இது தொடர்பில் சரியான கவனம் செலுத்தியதா? என்பதிலேயே பிரச்சினை உள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் கூறக்கூடியவற்றை தெரிவித்தனர். அவ்வாறான நேரத்தில் அரசாங்கத்திற்கென பொறுப்புகள் உள்ளன. அமைச்சரவையை கூட்ட வேண்டும். அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை அழைக்க வேண்டும். பாதுகாப்பு சபையை கூட்ட வேண்டும். முப்படையினரையும் தயார்படுத்த வேண்டும். இவை எதனையும் செய்யவில்லை. இந்த விடயங்களில் அரசாங்கம் கவனம் கொள்ளாமல் செயற்பட்டதன் விளைவையே நாங்கள் இப்போது அனுபவிக்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *