இலங்கை

அனர்த்த காலத்திலும் தமிழ் புறக்கணிப்பு; ‘சம உரிமை இயக்கம்’ கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிடப்படுவது பாரிய பிரச்சினை என சுட்டிக்காட்டி, ‘சம உரிமை இயக்கம்’ ஜனாதிபதி செயலகத்தில் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த இயக்கத்தின் தலைவர் தென்னே ஞானானந்த தேரர், கடந்த அனர்த்த காலத்தின் போது அரசாங்கத்தின் தரப்பிலிருந்து ஏற்பட்ட பாரிய குறைபாட்டை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அனர்த்தங்கள் குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கைகள், அபாய வலயங்களிலிருந்து வெளியேறுமாறு விடுக்கப்படும் எச்சரிக்கைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அனைத்தும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே வெளியிடப்பட்டன.தமிழ் மொழியில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை,” என குற்றம் சாட்டினார்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 25 சதவீதத்தினர் தமிழ் மொழி பேசுபவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய தேரர், அவர்கள் தங்களது மொழியின் காரணமாக மீண்டும் ஒரு அனர்த்தத்திற்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை கூட தமிழ் மொழிபெயர்ப்பு இன்றி வெளியிடப்பட்டமை ஒரு பாரிய தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தேர்தல் காலங்களில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று சம உரிமை பற்றிப் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இப்போது பழைய பாதையிலேயே பயணிக்கிறதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

1956-ஆம் ஆண்டின் ‘சிங்களம் மட்டும்’ என்ற மொழி கொள்கையினால் நாடு மூன்று தசாப்த கால யுத்தத்தை எதிர்கொண்டதை நினைவூட்டிய அவர், அந்த அழிவுப் பாதையில் மீண்டும் செல்ல வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரித்தார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.எனவே, அந்த மக்களைப் புறக்கணித்து அரசாங்கம் செயற்பட முடியாது.

இதுவரை இழைக்கப்பட்ட தவறுகளை ஏற்றுக்கொண்டு, அரச கருமங்கள் மற்றும் அவசர அறிவிப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிடுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சம உரிமை இயக்கம் கோரிக்கை விடுப்பதாக தென்னே ஞானாந்த தேரர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *